
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. தீபாவளிக்குப் படம் ரிலீஸாக இருக்கிறது. கடந்த வருட தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’ வெளியானது. ஒரு வருடத்துக்குப் பின் ‘சர்கார்’ ரிலீஸாக இருப்பதால், அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘2.0’, கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டை விழுங்கியிருக்கிறது. கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 543 கோடி ரூபாயைச் செலவழித்துள்ளார் ஷங்கர். ரஜினி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
‘2.0’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீடு கடந்த வருடமே துபாயில் நடைபெற்றது. கடந்த வருடமே படமும் ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இந்த இரண்டும்தான் இந்த வருடத்தின் ஆகப்பெரிய பட்ஜெட் படங்கள். மற்ற மொழிகளிலும் இந்தப் படங்கள் வெளியாகும் என்பதால், வசூலுக்கு குறைவிருக்காது. எனவே, மற்றப் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை, இந்தப் படங்களில் இருந்து ஈடுகட்டிக் கொள்ளலாம் என்ற கனவுடன் காத்திருக்கின்றனர் விநியோகதஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும். அவர்களின் கனவு நிறைவேறுமா?
