
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றிப் படங்களை இயக்கிய பின், தமிழ் பட உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அடுத்த கட்டமாக, போனிக் கபூர் தமிழில் தயாரிக்கும், நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
அஜித், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, பிரம்மாண்ட படமாக தயாராகி இருக்கும் நேர் கொண்ட பார்வை படம், வரும் 8ல் ரிலீசாகிறது.
இந்நிலையில், போனிக் கபூர் தயாரிக்க, நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் வினோத். விரைவில் அடுத்தப் படத்தின் படபிடிப்பும் துவங்க இருக்கிறது. இந்நிலையில், வினோத் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;
நடிகர் அஜித்தை வைத்து இரு படங்கள் அடுத்தடுத்து இயக்குவது என்பது எனக்கான பெருமை. என் திறமைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வெகுமதியாக கருதுகிறேன். அஜித் ஒரு அற்புதமான நடிகர். நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை செய்து முடிக்கும் வரையில், அவரும் பொறுமையாக இருந்து நடித்துக் கொடுக்கும் மிகச் சிறந்த நடிகர். எப்போதும் அமைதி; எளிமை. அது அவருக்கான அடையாளம். அவரது அடுத்தப் படம், அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும். அஜித்தின் தோற்றமும் வித்தியாசமாக காட்டப்படும்.
அஜித்தை அடுத்து விஜய்க்காகவும் ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன். கதை விஜய்க்குப் பிடித்து போய் இருப்பதால், அடுத்து அவருக்கே, நான் படம் இயக்கும் வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன். அவருடைய கண் அசைவுக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு வினோத் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, லோகேஷ் கனகராஜ் என்பவர் இயத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி இருக்கிறார்
