Friday, October 30
Shadow

எனக்கு ‘சகுந்தலா தேவி’ கொடுத்தது நிறைய…! – வித்யா பாலன் பேட்டி

கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து, ‘கணித மேதை’ என்று கொண்டாடப்படுபவர் சகுந்தலா தேவி. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை வரலாறு, அனு மேனன் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதில் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார் வித்யா பாலன். கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்தது பற்றி வித்யா பாலனிடம் பேசியதிலிருந்து…

‘சகுந்தலா தேவி’யாக நடிக்க உங்களுக்கு எந்த அளவு முன்தயாரிப்பு தேவைப்பட்டது?

தென்னிந்திய பேச்சுவழக்கில் பேசக்கூடியவர் சகுந்தலா தேவி. எனவே அதற்கான பயிற்சிகளை நான்மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிறந்த பெண்மணி, அழகானவர், அழகான ஆடைகளை உடுத்தக்கூடியவர் ஆகிய விஷயங்களை எல்லாம் தாண்டி நான் அவருடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் முக்கிமானதாக இருந்தது.

சகுந்தலா தேவியின் சிறப்பம்சம் என எதைச் சொல்வீர்கள்?

சகுந்தலா தேவியின் சிறப்பே ‘நம்மாளும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க முடியும்’ என சக மனிதர்களை நினைக்க வைத்ததுதான். கணிதம் அனைத்திலுமே இருக்கிறது என்று மக்களுக்கு அவர் புரியவைத்தார். கணிதம் இயற்கையிலும் இருக்கிறது, இசையிலும் இருக்கிறது, சமையலிலும் இருக்கிறது என்று அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் அவர்களுக்குக் கணிதத்தின் மீது இருந்த அச்ச உணர்வு குறைந்தது. எனவே, சகுந்தலா தேவியின் நம்பிக்கையிலிருந்து ஒரு சிறிய பகுதியை நான் எடுத்துக்கொண்டேன். எனக்குக் கணிதத்தில் ஓரளவு ஆர்வம் உண்டு என்பதால் என்னால் அவரது கதாபாத்திரத்துடன் ஒன்ற முடிந்தது.

சகுந்தலா தேவியின் கதாபாத்திரத்திலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்ட விஷயம் என்ன?

நீங்கள் நட்சத்திரங்களைத் தொடவிரும்பினால் உங்களால் அதைத் தொட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும். ‘உன் கனவு பலிக்காது’ என்று யாரையும் நீங்கள் சொல்ல அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, பெண்கள். இதுதான் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம்.

ஆளுமை மிகுந்த பெண்களைத் திரையில் வெளிப்படுத்தி வருகிறீர்கள். அது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

நிச்சயமாக. ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்குள் ஒரு விஷயத்தை விட்டுச் செல்கிறது; எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. ஏதோ ஒரு வகையில் அவை எனக்கு நிம்மதியை வழங்குகின்றன. சகுந்தலா தேவியிடமிருந்து நான் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொண்டேன். உங்களிடம் தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் பள்ளிக்குக்கூடச் சென்றதில்லை. ஆனால், ‘மனிதக் கணினி’ என்று உலகமே அவரை அடையாளம் கண்டுகொண்டது. எனவே, உங்களை நீங்கள் நம்பினால் எல்லாமே சாத்தியம்தான்.

குடும்பத்தினரால் ஆதரிக்கப்படும் பெண்கள் – குடும்பத்துக்காகத் தியாகம் செய்யும் பெண்கள். இந்த இருவகையில் ‘சகுந்தலா தேவி’ எந்தத் தளத்திலிருந்து வந்தவர்?

நீங்கள் ஒரு தாயாக இருந்தால் உங்கள் வாழ்க்கையே குழந்தைகளைச் சுற்றித்தான் இருக்கிறது. ஆனால், ‘சகுந்தலா தேவி’ தன் குழந்தையை எந்த அளவு நேசித்தாரோ அதே அளவு தன் கனவுகளையும் நேசித்தார். உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட பெண்களை நாம் ஆதரிக்க மறுக்கிறோம். மகள், தாய்,மனைவி என்ற நிலைகளைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. ‘சகுந்தலா தேவி’ இந்த எல்லா நிலைகளையும் எப்படிக் கடந்து வந்தார் என்பதுதான் படம்.

வெற்றிபெற்ற பெண்களை உலகுக்குக் காட்டும் பயோபிக் படங்கள் அதிகமாக வருவதில்லை. அதேநேரம் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருக்கிறதே?

எல்லாத் துறைகளைச் சேர்ந்த பெண்களையும் கொண்டாடும் காலம் இது. பெண்களைப் பற்றி இன்னும் அதிகமான பயோபிக் படங்கள் வரப்போகின்றன. சொல்லப்படவேண்டிய கதைகள் ஏராளம். பாலினரீதியாகத் திரைப்படங்கள் எப்போதுமே சரியானவையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஆனால், ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

கற்பனைக் கதாபாத்திரம், நிஜக் கதாபாத்திரம், இரண்டில் எது கடினம் என நினைக்கிறீர்கள்?

இரண்டுமே சம அளவில் கடினமானவைதாம். ஆனால், நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. நமக்கு வெளியில் குறிப்புகள் கிடைக்கும். நாம் அவர்களைப் பற்றிய காணொலிகள், கட்டுரைகளைப் படித்து ஓரளவுக்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள முடியும். கற்பனையையும் தாண்டி நிஜ வாழ்வில் அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் திரையில் கொண்டு வரவேண்டும். எனவே, நிச்சயமாக நிஜக் கதாபாத்திரமாக நடிப்பதில் கூடுதல் பொறுப்பும் சவாலும் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

நீங்கள் பாலிவுட்டில் உயர்ந்த மற்றும் தாழ்ந்த  இடம் இரண்டையும் பார்த்து விட்டீர்கள். ஒரு பெரிய வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கும் அல்லது போராடிக் கொண்டிருக்கும் இளம் நடிகர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒரு விஷயத்தைத் தாங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் சிலவற்றில் வெற்றி காண்பீர்கள் சிலவற்றில் தோல்வியை சந்திப்பீர்கள், இந்த நிராகரிப்புகள் மற்றும் தோல்விகள் அனைத்தும் உங்களுடைய கனவுகளில் உள்ள நம்பிக்கையை சோதிக்கிறது. இதை தான் நான் உணர்ந்தேன் மேலும் உணர்ந்து கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையில் நான் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல நாம் அனைவரும் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கின்றோம். ஒருமுறை நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில்லை, வாழ்க்கை அதனுடைய சொந்த போக்கை தேர்ந்தெடுக்கும், இதை கண்டு துவண்டுவிடாமல், அது உங்களை ஒரு பெரிய வெற்றிக்காக தயார் படுத்துகிறது என்பதை உணர வேண்டும். இது வைரத்தை மெருகூட்டுவது போன்றது. ஆகவே தாங்கள் நம்பிக்கையை கைவிடாமல் இருக்க வேண்டும்.

சில நேரங்களில் நம்முடைய உணர்வுகளை சொல்ல நமக்கு சிலர் தேவைப்படுகின்றனர், அதனை நம்பகமான ஒருவரிடமோ அல்லது ஒரு நிபுணர்களிடமோ அல்லது அதை ஒரு காகிதத்தில் எழுதி தூக்கி எறியுங்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளியில் கொட்டி விடுங்கள். அதனை நாம் வெளியில் தெரிவிக்கும்போது மட்டுமே நம்மை நாம் தேற்றிக்கொள்ள முடியும். நான் இதனை ஒரு ஆலோசனையாக கூறவில்லை, ஆனால் என்னுடைய பயணத்தில் நான் இதுவரை கற்றுக்கொண்டதை தெரிவிக்கிறேன். இது விலை மதிப்பற்றது என்று நான் நினைக்கிறேன. சிலரிடம் பேசும்பொழுது நீங்கள் பலவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் கட்டாயம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அது என்றும் நேரான பாதையில் போவதில்லை. நேரான பாதையில் போனால் அது நமக்குச் சலித்துப் போய் விடும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு இந்த நான்கு மாதங்களில் பல திறமையான நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர், பல துயரங்கள் ஏற்பட்டுள்ளது. உங்கள் கண்ணோட்டத்தில் எதிர்காலம் நிச்சயமற்று இருப்பதால்தான் இத்தகைய உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்று நினைக்கின்றீர்களா?

இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை முன்பை விட அதிகமாக நாம் இப்போது உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும், உங்களுடைய பக்கத்து வீட்டாருக்கும் அனைவருக்குமே ஒரு கடினமான காலகட்டம் தான். அனைவருக்குமே சிக்கல்கள் அல்லது போராட்டங்கள் உள்ளன, சிலருக்கு வாழ்வதே கடினமாக உள்ளது. நீங்கள் தாழ்வாக உணரும்போது நான் உட்கார்ந்து உங்களுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிதானது, ஆனால் அவ்வாறு இருக்கும் போது நீங்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த கடுமையான காலகட்டத்தில் உலகமே இதை சந்திக்கிறது என்று நாம் ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கனவுகள் தள்ளிப் போகிறது என்று நினைக்காதீர்கள் அனைவருடைய வாழ்க்கையுமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அனைத்தும் இயல்பான நிலைக்கு திரும்பும் போது நாம் நம்முடைய வழக்கமான வேலையை செய்யத் துவங்கி விடுவோம், அப்போது நாம் இந்த கடுமையான காலகட்டத்தில் என்ன கற்றுக்கொண்டோமோ அதனை உணர வேண்டும், இந்த நேரத்தில் நானுமே என்னை மாற்றி அமைக்க, இந்த காலகட்டத்துடன் ஒத்துப்போக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் தொற்று நோய் அனைத்துவித சவால்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன, எதிர்காலம் என்ற வார்த்தை மிகவும் ஆபத்தானதாக தெரிகிறது. திரைத்துறைக்கு மட்டுமில்லாமல் இது அனைத்து துறைக்கும் பொருந்தும், ஆனால் வருங்காலத்தில் திரைத்துறை எப்படி இருக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

இந்த இக்கட்டான காலகட்டத்தில் எதையுமே கணிக்க இயலாது, இன்னும் இது எத்தனை நாட்களுக்கு தொடரும் என்று எனக்கு தெரியாது, எப்போது நாம் திரும்ப வேலைகளை ஆரம்பிக்க போகிறோம் என்று எனக்கு தெரியாது. வேலைகளை திரும்ப ஆரம்பிக்கும் போது அது எப்படி இருக்கும் என்றும் தெரியாது, நான் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொண்டேன் இந்த காலகட்டத்தில் திட்டமிடுவது எந்தவித பலனும் அளிக்காது என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. நாம் அனைவரும் செய்யக்கூடிய ஒரே விஷயம் நாம் இன்று எந்த குறையும் இல்லாமல், ஆசிர்வாதத்துடன் இருப்பதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.