
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வருகிற 31-ந் தேதி நள்ளிரவு சன்னிலியோன் பங்கேற்க இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கர்நாடக உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். போலீசாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சன்னிலியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அனுமதி வழங்காதது குறித்து போலீசார் தரப்பில் 3 முக்கிய காரணங்கள் கூறப்பட்டுள்ளது.
* சன்னிலியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெறவில்லை.
* பெங்களூரு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அன்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் தனியாக போலீசாரால் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை.

* இந்த நிகழ்ச்சிக்காக மொத்தமாக 8 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் நிகழ்ச்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தில் சன்னி லியோன் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நிகழ்ச்சி நடக்குமா? அப்படி நடக்காவிட்டால் டிக்கெட்டுக்குரிய பணம் திரும்ப கிடைக்குமா என்று குழம்பிப் போயிருக்கிறார்கள்.
பெங்களூரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என்று ஏற்கனவே சன்னிலியோன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
