
இது தொடர்பாக திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவில் ‘கபாலி’ குறித்து, “கடந்த 6-7 மாத காலமாக, ‘கபாலி’ வெளியீட்டிலிருந்து கணக்கிடுங்கள். ‘கபாலி’, தீபாவளிக்கு வந்த ‘கொடி’, ‘காஷ்மோரா’, பிறகு வந்த ‘தொடரி’, ‘பைரவா’, ‘போகன்’, ‘சிங்கம் 3’ என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் பரபரப்பாக மாபெரும் வெற்றி, இமயம் தாண்டும் வெற்றி என்றெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். ‘கபாலி’ படத்துக்கு, தாணு, மகிழ்ச்சி மகிழ்ச்சி என 200 நாள் வரை விளம்பரம் செய்துள்ளார். உங்கள் மனசாட்சிப்படி விளம்பரம் செய்யுங்கள்.
உண்மையிலேயே அந்தப் படம் 200 நாள் ஓடிய படமா? பொதுமக்களை வேண்டுமானால் இதன் மூலம் ஏமாற்றலாம். ஆனால் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். நான் சொன்ன இந்தப் படங்களில் ஒரு விநியோகஸ்தர் கூட சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதை வைத்து வெற்றி என்று சொல்லுகிறீர்கள்?” என்று திருப்பூர் சுப்ரமணியம் கடுமையாக சாடியிருந்தார்.
திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டுக்கு ‘கபாலி’ தயாரிப்பாளர் தாணு, “கபாலியின் வெற்றி குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டேன். உங்களுக்கு சந்தேகம் என்றால், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விவரங்களைத் தருகிறேன், அவர்களிடம் கேட்டறிந்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். முதலில் திருப்பூர் சுப்பிரமணியம் அவருக்கெதிரான சில குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். ஒரு விநியோகஸ்தராக, திரையரங்க உரிமையாளராக இருந்து அவர் மீதே நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
அவர் திரையரங்கு உரிமையாளர்களை மூளைச் சலவை செய்து, அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளருக்கு 40-50 சதவித லாபத்தை மட்டுமே தந்து, மீதியை அவரே வைத்துக் கொள்கிறார்.
