கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் தமிழகர்கள் வாழும் குறிப்பிட்ட ஒரு பகுதி தான் கதைக்களம். கேடிகளும், ரவுடிகளும் நிறைந்த அப்பகுதியில் வசிக்கும் தமிழரான கிருஷ்ணா, ரத்தத்தை பார்த்தாலும் சரி, பட்டாசு சத்தத்தை கேட்டாலும் சரி உடனே மயங்கி விழுந்துவிடும் அளவுக்கு பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கிறார். எது எப்படி இருந்தாலும், தனது தங்கையை நல்லபடியாக ஆளாக்கி, தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். அதற்காக பல்வேறு தமிழ்நாட்டு வரண்களை அவர் அழைத்து வந்தாலும், குடிகார தந்தையான எம்.எஸ்.பாஸ்கரால் அவரது தங்கையின் திருமணம் தடைபடுகிறது.
இதற்கிடையே, கிருஷ்ணாவின் தங்கை கால் டாக்ஸி டிரைவர் ஒருவரை காதலிக்க, அவர் சரியான ஆள் இல்லை என்பதை தெரிந்துகொள்ளும் கிருஷ்ணா, தனது ஏரியா பெரிய மனிதரான ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் தமிழர் ஒருவருக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். கிருஷ்ணா தங்கையின் காதல் விவகாரம் தெரிந்திருந்தாலும், அந்த நபர் கிருஷ்ணாவின் தங்கையை திருமணம் செய்துக்கொள்கிறார்.
இதற்கிடையே, கிருஷ்ணாவின் தங்கை திருமணத்திற்கு பிறகு தனது முன்னாள் காதலனுடன் பைக்கில் செல்வதையும், மருத்துவமனையில் கணவர் என்று அவர் பெயரை சொல்வதையும் அறிந்துக் கொள்ளும் கிருஷ்ணா, தங்கையை கண்டிக்கையில் அவர் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதற்கு காரணம் தங்கையின் முன்னாள் காதலன் தான் என்று நினைக்கும் கிருஷ்ணா, அவரது கணவருடன் சேர்ந்து தங்கையின் முன்னாள் காதலனை கொலை செய்ய முயற்சிக்கும் போது, தனது தங்கை தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டாள் என்ற உண்மையை தெரிந்துகொள்கிறார். மேலுக், அவளது கொலைக்கு காரணம், அவளது முன்னாள் காதலன் அல்ல என்பதோடு, அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதையும் தெரிந்துக்கொள்ளும் கிருஷ்ணா, அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் ‘களரி’ படத்தின் மீதிக்கதை.
வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் கிருஷ்ணா, பாசமான அண்ணனாகவும் பயந்த மனிதராகவும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
கிருஷ்ணாவின் தங்கை வேடத்தில் நடித்திருக்கும் புதுவரவு சம்யுக்தா, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அண்ணனுக்காக காதலை தூக்கி எரிபவர், அதே அண்ணனிடம் தனக்கு நடந்த கொடுமையை சொல்லாமல் மெளனம் காக்கும் இடத்தில் கண்களினாலேயே நடித்திருப்பவர், கண்ணில் வைக்கும் மையை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது.
கிருஷ்ணாவின் காதலியாக வரும் வித்யா பிரதீப் காட்சிகள் அவ்வளவு இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தியுள்ளார் தன் அழகில் ரசிகர்களை வசீகரிக்கிறார் .
தங்கைக்காக பழிவாங்கும் அண்ணன், என்ற கருவை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கும் இயக்குநர் கிரண் சந்த், அதை ஹீரோயிஷத்தோடு சொல்லாமல் சாதாரண மனிதராக சொல்லியிருப்பது தான் இந்த படத்தின் பலம்.
பயந்த சுபாவம் கொண்ட கிருஷ்ணா, தனது தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கியவர்களை பழி வாங்கும் விதம் எதிர்பாரத ட்விஸ்டாக இருந்தாலும், அவரது தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் இவர்களாக தான் இருக்கும், என்பதை ரசிகர்கள் யூகிக்கும் விதத்தில் இருந்தாலும் விறுவிறுப்பாக தான் திரைக்கதை நகர்கிறது.
கிருஷ்ணாவின் குடிகார தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், நடிப்பில் மட்டும் வித்தியாசத்தை காட்டாமல் தனது வசன உச்சரிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கேரளாவில் இருக்கும் தமிழர்கள் பகுதி தான் கதை களம் என்றாலும், படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மலையாள கலப்பு இல்லாமல் தமிழ் பேச, எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் தான் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியிருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், விஷ்ணு, பிளாக் பாண்டி, மீரா கிருஷ்ணன், கிருஷ்ணதேவா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதோடு, தங்களது வேலையை சரியாகவும் செய்திருக்கிறார்கள்.
வி.வி.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சில தாளம் போட வைக்கிறது. மெலொடி பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில் வேறு ஒரு கேரளாவை பார்க்க முடிந்தது. எங்கு பார்த்தாலும் இயற்கை அழகோடு இருக்கும் கேரளாவில் இப்படி ஒரு பகுதியா! என்று தனது கேமராவின் மூலம் நமக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைக்கப்பட்டாலும், அதை கமர்ஷியலாக படமாக கொடுக்க நினைத்திருக்கும் இயக்குநர் தேவையில்லாத இடங்களில் பாடல்களை திணித்திருப்பதும், காமெடி என்ற பெயரில் சில காட்சிகளில் மொக்கைப் போட்டிருப்பது படத்திற்கு மிகபெரிய மைனசாக அமைந்திருக்கிறது.
அண்ணன் – தங்கை செண்டிமெண்டை அளவோடு கையாண்டிருக்கும் இயக்குநர் கிரண் சந்த், படத்தின் இரண்டாம் பாதியை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானராக விறுவிறுப்போடு நகர்த்தினாலும், அவரது சஸ்பென்ஸ் இதுவாகத்தான் இருக்கும், என்று யூகிக்க கூடிய விதத்தில் இருந்தாலும் திரைக்கதைyin சற்று பலத்தால் படம் நன்றாக இருக்கிறது கிருஷ்ணா எப்படி அவர்களை பழி வாங்கப் போகிறார், என்ற சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ் வரை நீடிப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில், கதைக்களம், கதாபாத்திரங்கள், ஹீரோயிஷம் இல்லாத ரிவேஞ் ஆகியவற்றில் வித்தியாசத்தை கையாளப்பட்டிருக்கும் இந்த ‘களரி’ யை பார்க்கலாம். Rank 3/5