
2010-ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘களவாணி’. நசீர் தயாரித்திருந்த இப்படத்தில் விமல், ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
சற்குணம் இயக்கி, தயாரிக்க மீண்டும் விமல், ஓவியா நடிக்க ‘K 2’ என்று தலைப்பில் படமொன்று தயாராகி வருகிறது. இதன் தலைப்பை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
மாதவனை நாயகனாக வைத்து விரைவில் துவங்கவுள்ள படத்திற்கு முன்பாக, இப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் சற்குணம். இப்படத்தை பலரும் ‘களவாணி 2’ என்றே குறிப்பிட்டு, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ‘களவாணி’ தயாரிப்பாளரான நசீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘களவாணி 2’ படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தற்போது பூனம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் ‘வதம்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறோம். மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க ‘களவாணி 2’ என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளோம். ‘களவாணி 2’ படத்திற்கான படத் தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று நசீர் தெரிவித்திருக்கிறார்.