Monday, April 28
Shadow

பாகுபலி 2 படத்தை பற்றி கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு

தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன், பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி’. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்.

படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.

‘பாகுபலி’ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்.

இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்.

‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா? ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன்.

Leave a Reply