

இந்த தீபாவளிக்கு விய்யின் ‛பிகில்’ படமும், கார்த்தியின் ‛கைதி’ படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யுடன் போட்டி போட்டால் கார்த்தி காணாமல் போய்விடுவாரே என கார்த்தி ரசிகர்கள் கலங்கிப் போய் இருந்தனர். இருப்பினும் கைதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தங்கள் படத்தின் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்திருந்ததால், விஜய் படத்துடன் மோத தயாரானது. அவர்கள் எதிர்பார்த்தபடி படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது,
ரூ.30 – 40 கோடிக்குள் தயாரான கைதி படத்தில் நாயகி இல்லை, பாடல்கள் இல்லை, எந்த பிரமாண்டமும் இல்லை. முக்கியமாக பஞ்ச் டயலாக் இல்லை. அப்படியும் படம் பிரமாதமாக ஓடுகிறது என்றால் முழுக்க முழுக்க கதை மட்டுமே. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரம் என மற்ற மாநிலங்களிலும் ‘கைதி’ லாபத்தைக் கொடுத்துள்ளது. ஹிந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ரூ.50 கோடி, தெலுங்கு ரூ.20 கோடி, கேரளா ரூ.11 கோடி, கர்நாடகா ரூ.11 கோடி, வெளிநாடுகளில் ரூ.10 கோடி என இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்து அனைத்து தரப்பினருக்கும் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. முதன்முறையாக கார்த்தி படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி அவரை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியிருக்கிறது. தங்களிடம் இருக்கும் வித்தியாசமான கதைகளை கார்த்தி ஏற்று நடிப்பார் என வளரும் இயக்குனர்களுக்கும் அது நம்பிக்கையை விதைத்துள்ளது.
