

இளையராஜா இசையில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ராணி’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கியுள்ளார். முத்துகிருஷ்ணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர்கள் சமுத்திரகனி, பேரரசு, கரு.பழனியப்பன், நடிகர்கள் மனோஜ்குமார், நமோ நாராயணன், நடிகை தன்ஷிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் கரு.பழனியப்பன் பேசும்போது, ‘நான் இதுவரை யாரிடமும் கோரிக்கைகள் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். இப்போது முதன் முதலாக இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
அதாவது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனெனில் இளையராஜா பல வருடங்களுக்கு முன்பு இசையமைத்த பாடல்களையே நாம் இன்று வரை கேட்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் கடந்து அனைவரும் ரசிப்பார்கள்.
அதுபோல், கார்த்திக் ராஜாவிடமும், யுவனிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். இளையராஜா இதுவரை இசையமைத்த படங்களின் பட்டியலை உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்த திரையுலகையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும்’ என்றார்.
