விஜய் ஆண்டனி தோல்விக்கு முற்றுபுள்ளி வைத்த இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் என்று சொல்லணும் தன் வித்தியாசமான திரைகதை மூலம் தமிழில் மிக அற்புதமான ஒரு திரில்லரை கொடுத்துள்ளார் இயக்குனர் காட்சிக்கு காட்சி நம்மை நாற்காலி நுனிக்கு கொண்டு செல்லும் திரைகதை மூலம் நம்மை மிரட்டி இருக்கிறார்.
சலீம் படத்தில் பார்த்த விஜய் ஆண்டனியை மீண்டும் பார்க்கமுடிந்தது என்று சொன்னால் மிகையாகது இது தான் அவருக்கான கதை இப்படியான படத்தை நடிப்பையும் தான் விஜய் ஆண்டனி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு சாட்சி இந்த படம் காரணம் ரசிகர்கள் அரங்கத்தில் அப்படியான ஒரு ரசனையை வெளிபடுத்துகிறார்கள்
த்ரிஷ்யம் படம் போல் நியாயமான காரணத்திற்கு ஒரு கொலை செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஒரு புத்திசாலி யோசிக்கும் வகையிலான கதையை மிக அருமையாக விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். பாராட்டுக்கள். இந்த உலகில் வாழ தகுதியே இல்லாத ஒரு நபரை கொலை செய்ததற்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமா? என்ற கான்செப்டை மிக அருமையாக கொண்டு சென்றுள்ளார். இடைவேளைக்கு பின் திடீர் திடீரென தோன்றும் டுவிஸ்டுகள் ஆச்சரியம் என்றால் கிளைமாக்ஸில் கொலைக்காரன் காரணத்தை கூறும் காட்சி ஆச்சரியத்தின் உச்சகட்டம்.
படத்தின் கரு என்றால் ஒரு புத்திசாலிக்கும் ஒரு அதிதீவிர போலீஸுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்.
தன் எதிர் வீட்டில் வசிக்கும் அம்மா, மகளுக்காக ஒரு கொலையை மறைக்க பார்க்கிறார் புத்திசாலியான விஜய் ஆண்டனி. திறமையான போலீஸ் அதிகாரியான அர்ஜுன் கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் சதுரங்க ஆட்ட திரில்லர் பயணம் தான் மொத்தப் படத்தின் கதை.
ஜப்பான் மொழியில் வெளியான சஸ்பெக்ட் X படத்தின் அனுமதி பெற்ற தழுவல் தான் கொலைகாரன். முறையாக அனுமதி பெற்றாலும் அதை அவர்கள் சொல்லவில்லை. இதே படத்தை தழுவி உருவானது தான் பாபநாசம். விஜய் ஆண்டனிக்கு ஐந்து தோல்விகளுக்கு பிறகு நிமிர்ந்து கொள்ள ஒரு படம். ஒரு கொலையின் போது ஆரம்பிக்கும் படம், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் தடதடவென இறுதி வரை சஸ்பென்ஸை தக்க வைத்து வெற்றி அடைந்திருக்கிறது. ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அத்தனையும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. கதை சொல்லப்படும் விதம் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் குழப்பினாலும், பிற்பாதியில் அதை சரிசெய்து விடுகிறார்கள். வசனங்கள் கனகச்சிதம்.
தொடர் தோல்வியில் இருந்து விஜய் ஆண்டனி தன்னை இப்படத்தில் மீட்டெடுத்திருக்கிறார். அவருக்கான டெய்லர் மேட் ரோலாக இது அமைந்திருக்கிறது. நான், சலீம் படங்களின் விஜய் ஆண்டனியை இதில் மீண்டும் பார்க்கலாம். அவரது அமைதி கதாபாத்திரத்தின் பலத்தை கூட்டுகிறது.
அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக ஆச்சர்யம். அவர் இதுவரை செய்த போலீஸ் பாத்திரங்கள் இப்படத்திற்கு மிக பலமாய் இருக்கிறது. பார்வையிலேயே விசாரணை செய்யும் அவரது காட்சிகள் படத்தில் வரும்போது படபடக்க வைக்கின்றன. விஜய் ஆண்டனிக்கு எதிரான அவரது கதாபாத்திரம் தான் படத்தின் தூண். ஹீரோயின் ஆஷிமா நர்வால் வழக்கமான தமிழ்ப்பட கதாபாத்திரம் அல்ல. படத்தின் கதையே அவரைச் சுற்றிதான் அமைந்துள்ளது. அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பாடல்களிலும் நடனங்களிலும் கவர்கிறார்.
கவனம் பெறாத லீலை படத்திற்குபின் இப்படம் ஆட் ரூ லூயிஸ்க்கு பெருமைப்படும் படியான படைப்பு. ஒரிஜினல் படைப்பை அப்படியே செய்யாமல் தமிழுக்கு ஹீரோயிசத்துக்கு ஏற்றவாரும், அதே நேரம் படத்தின் கரு கெடாமலும் ஒரு அட்டகாசமான திரில்லர் படத்தை தந்துள்ளார். வசனங்கள் படத்தின் பெரிய பலமாக இருக்கிறது. தேவையற்ற காட்சிகள் ஏதுமில்லை என்பதே பெரும் ஆறுதல். ஆரம்பத்தில் ஒன்றுவது கொஞ்சம் கடினமாக உள்ளது. காட்சிகள் புரிய நேரமெடுக்கும் முதல் பாதியை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
இசை சைமன். மிகச் சாதாரண காட்சிகளிலும் தன் இசையால் திரில் அனுபவத்தை தருகிறார் சைமன். படத்திற்காக வரும் அந்த தீம் நெஞ்சின் படபடப்பை கூட்டுகிறது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் இணைந்து மிரட்டியுள்ளனர். தேவையற்ற எந்த சிறிய கட்டும் இல்லாமல் ஒரு திரில் அனுபவத்தை தந்துள்ளது எடிட்டிங்.
அருமையான கதாபாத்திரத் தேர்வு, தொய்வில்லா திரில் திரைக்கதை. நெடுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு அட்டகாசமான திரில்லர். தவறவிடக் கூடாத திரில் பயணம் இந்த கொலைகாரன்.
