Sunday, April 11
Shadow

நடிகர் ஆர். முத்துராமன் பிறந்த தினம்

 
முத்துராமன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது மகன் நடிகர் கார்த்திக் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த “சேவா ஸ்டேஜ்” நாடகங்களில் நடித்து வந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கிராமத்தில் பிறந்தவர். ஓந்திரியர் ( ஓந்தரையர் – உயர்ந்தரசு ) இவரது குடும்பப் பெயர். முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் இருந்த எம்.ஜி.ஆர் (‘என் அண்ணன்’, ‘கண்ணன் என் காதலன்’ போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் (‘பார் மகளே பார்’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’ போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் (‘காதலிக்க நேரமில்லை’) ஏவி. எம். ராஜன் (‘பதிலுக்குப் பதில்’, ‘கொடிமலர்’) ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.
 
இவர் நடித்த படங்களில் சில
போக்கிரி ராஜா, குரு, பஞ்சவர்ணக்கிளி, வானம்பாடி, மேஜர் சந்திரகாந்த், போலீஸ்காரன் மகள், காதலிக்க நேரமில்லை, மயங்குகிறாள் ஒரு மாது, காலங்களில் அவள் வசந்தம், அன்புத்தங்கை, சர்வர் சுந்தரம், சூரியகாந்தி
CLOSE
CLOSE