Friday, May 1
Shadow

மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் பிறந்த தினம்

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.  இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் (1880 – 5/08/1952)  மகனாகப் பிறந்தார்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.
அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.
ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[8] இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.