Saturday, March 25
Shadow

அலாவுதீனின் அற்புத கேமரா பட கதை குறித்து இயக்குனர் விளக்கம்

அலாவுதீனின் அற்புத கேமரா படத்திற்கும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனுக்கு சொன்ன கதையும் வேறு வேறு என்று மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தெரிவித்துள்ளார்.

மூடர் கூடம் படத்தின் புகழ் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இப்படத்தில், நவீன் உடன் இணைந்து கயல் ஆனந்தி நடித்துள்ளார். அதுவும், பிக்பாக்கெட் அடிக்கும் திருடியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில், உள்ள போது, ஃப்ளாஷ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொர்ணா சேதுராமன் இப்படத்தை வெளியிட தடை கோரியுள்ளார். இவர், விசாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், வார இதழ் ஒன்றிற்கு நவீன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: விசாகனுக்கு கதை சொல்லிவிட்டேன். அந்த கதை அவருக்கு பிடித்தும் விட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தமாகி தொடர்ந்து 9 மாதங்கள் படத்துக்காக பணியாற்றியுள்ளேன். மேலும், விசாகனின் தாய்மாமவிடம் வாங்கிய முன் பணத்தையும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் பிரித்துகொடுத்துவிட்டேன்.

அப்படியிருக்கும் போது, அவரிடம் வாங்கிய பணத்தை வைத்து விசாகனுக்காக படம் இயக்காமல், அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கியிருப்பதாகவும், தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது சொர்ணா சேதுராமனின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால், படம் நின்று போனதற்கான காரணத்தை சொல்ல விரும்பவில்லை. இப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் படம் நின்று போனதற்கான காரணம் தெரியும்.

தயாரிப்பு தரப்பிடமிருந்து எந்தப்பிரச்சனையும் வராமல் இருந்திருந்தால் விசாகனின் படம் குறிப்பிட்ட தேதியிலேயே இப்படம் தொடங்கியிருக்கும். இப்படத்தின் கதைக்கும் விசாகனுக்கும் சொன்ன கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறுபட்ட கதை. இது விசாகனுக்கே தெரியும். எது எப்படியிருந்தாலும், என்னுடைய தரப்பில் நியாயம் இருக்கிறது. நிச்சயம் நீதி வெல்லும் என்று நவீன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன் இப்படி கூறியிருந்த நிலையில், ரஜினியோ, பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் விசாகனுக்காக வாய்ப்பு கேட்டுள்ளார் என்று அண்மையில், தகவல் வெளியானது. அதோடு, ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ்ஜோ, தனுஷை வைத்த ஒரு படம் இயக்கயிருப்பதாக கூறப்பட்டது. அப்படியிருக்கும் போது, ரஜினி தனது 2ஆவது மருமகன் விசாகனுக்காக வாய்ப்பு கேட்கிறாரே என்ன செய்வது, யாரை வைத்து முதலில் படம் பண்ணுவது என்ற யோசனையில், கார்த்திக் சுப்புராஜ் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் உறுதிப்படுத்தாத தகவல் மட்டும் தான். எது எப்படியோ, விசாகன் ஏற்கனவே வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாகன் விரைவில், திரைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.