Friday, October 11
Shadow

நம்பியார் – திரை விமர்சனம் காமெடி மேஜிக் (5/3)

கோல்டன் பிரைடே பிலிம்ஸ் பேனரில் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் வழங்க, கணவர் ஸ்ரீகாந்த் கதாநாயகராக நடிக்க, அவரது ஜோடியாக சுனைனா நடித்து வெளி வந்திருக்கும் படம் தான் நம்பியார்.

எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதர்களின் மனதிலும் வில்லன் நம்பியார் மாதிரி ஒரு கெட்டமனசாட்சி ஒளிந்து கொண்டிருக்கும் அது செய்யும் சுயநலகெட்ட செயல்களால் நல்ல மனிதன் எப்படி எப்படி எல்லாம் தலை குனிவான்? சமயத்தில் எதிராளிகளின் துப்பாக்கி தோட்டாக் களுக்கு அவனது தலையே எப்படி குறியாகும்…? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘நம்பியார்’.

இதில், எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதராக ஸ்ரீகாந்த்தும் அவரது கெட்டமனசாட்சி வில்லன் நம்பியாராக சந்தானமும் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறார்கள்.

ராமு எனும் ராமசந்திரனாக, ஸ்ரீ, தண்ணியை போட்டால் நம்பியாராக பண்ணும் தகராறுகள் செம்ம… சுனைனாவிடம் தன் கெட்ட குணங்கள் எல்லாவற்றையும் சொல்லி அவரை விரட்டி, துரத்தி காதலிக்கும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதே நேரம் குடித்துவிட்டு அப்பா, அண்ணன், அண்ணி எல்லோரையும் நடுரோட்டில் இழுத்து போட்டு அடிப்பது சற்றே ஓவர்… என்றாலும் புது மாதிரி ரசனை.

சரக்கு அடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எனக் கேட்டு டிரங்க் & டிரைவ் செய்யும் டூவீலர் வாசிகளை பிடித்து பணம் பறிக்கும் போலீசிடம் லாங்லக்சர் அடித்து விட்டு, அருகில் டி.ஆர்.கட் அவுட்டை பார்த்ததும் அவர் பாணியில் வாடா யேன் மச்சி எனப் பேசி போலீஸ்காரர்களுக்கும் வலுக்கட்டாயமாய் ஊத்தி விட்டு அவர்களை அடித்து துவைப்பது போன்ற காட்சியில் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிறது.

ஸ்ரீயின் கெட்ட மனசாட்சியாக, ஸ்ரீக்கு புதுப்புது தில்லு முல்லு ஐடியாக்கள் தந்து அவரை சிக்கலில் மாட்டிவிடும் நம்பியாராக சந்தானம் லொட லொடவென பேசிக் கொண்டே இருந்தாலும் “ஏட்டுக் கோழி குருமா வுக்கு உதவாது….” என்பது உள்ளிட்ட புது வித காமெடி சரவெடி களால், ரசிகனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். பலே, பலே!

சுனைனா, சரோஜா தேவியாக கொப்பும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக படம் முழுக்க பவனி வருவது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஸ்ரீ’யின் அண்ணியாக தேவதர்ஷினி, அண்ணனாக சுப்புபஞ்சு, அப்பாவாக ஜெயப்பிரகாஷ், அம்மாவாக வனிதா, சுனிதாவின் அப்பாவாக டெல்லி கணேஷ், போலீஸ் ஏட்டுஜான் விஜய், கான்ஸ்டபிள் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி…, கெஸ்ட் ரோலில் வரும் ஆர்யா அவரது வுட்பி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

“ஆற அமர…” , “தூங்கும் பெண்ணே தூங்காதே…. ” உள்ளிட்டபாடல்கள் விஜய் ஆண்டனியின் இசையில் இதம், பதம். பின்னணி இசையும் பிரமாதம். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு ‘பளிச்’ பதிவு. விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு இன்னும் பக்கா தொகுப்பாக இருந்திருக்கலாம்.

கணேஷாவின் எழுத்து இயக்கத்தில், ஒரு சில குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத புது விதமாக கதை சொல்ல முயன்றிருக்கும் பாணியும் படம் முழுக்க வரும் அந்த எம் ஜி ஆர் சிலையும், நம்பியார் எனும் டைட்டிலும், நம்பியாரை – நம்பிக்கைக்குரியோராக ரசிகனுக்கு காட்டுகிறது!

“நம்பியார் ‘- எல்லா தரப்பினரும் ‘ரசிப்பர்!”

RANKING 5/3

Leave a Reply