
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற அதிகாரப்பூர்வ நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
ஆனால், கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் செயலி வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்களை ஒரு குடையின் கீழ் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ள ரஜினி, அவர்களை கொண்டு ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
முதற்கட்டமாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜன.28ம் தேதி நெல்லையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



