
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தைப் பற்றிய பேச்சு அந்தப் படத்தின் முதல் பார்வை வெளியான போதே ஆரம்பமானது. நாளை இப்படத்தின் இசையும் டிரைலரும் வெளியாக உள்ளதை முன்னிட்டு இன்று நயன்தாராவின் ‘ரத்தினமகாதேவி’ தோற்றத்தை வெளியிட்டார்கள். சற்று முன் கார்த்தி ‘என் பெயர் காஷ்மோரா’ என தன்னுடைய வித்தியாசமான தோற்றத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். படத்தில் ‘பிளாக் மேஜிக்’ செய்யும் வித்தைக்காரராக கார்த்தி நடிக்கிறார். படத்தின் இடைவேளை வரை தற்போதைய காலத்து கதையும், இடைவேளைக்குப் பின்னர் அரசர் காலத்து கதையும் படத்தில் இடம் பெற்றுள்ளதாக புதிதாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துவிட்டன. தீபாவளிக்கு வரும் படங்களிலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இந்தப் படம் அமைந்துள்ள. தமிழ் சினிமாவில் இதுவரை வராத ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். கார்த்தி ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நாளை நடைபெற உள்ளது. கார்த்தியின் முந்தைய படமான ‘தோழா’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெற்றி பெற்றது. அதனாலும் ‘காஷ்மோரா’ படத்திற்கு வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்தே சூர்யாவும் தம்பிக்காக ‘எஸ் 3’ படத்தின் வெளியீட்டை டிசம்பர் வரை தள்ளிப் போட்டார் என்ற தகவலும் உண்டு.