புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் குறித்து பட தயாரிப்பாளர் ஒருவர் தனது அனுபவத்தை Cinema Pluz இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த அனுவ கதை திரைப்படத்தை மிஞ்சும் கதையாக இருப்பதுடன், நீதிமன்றம் கயவர்களின் தலையில் சம்மட்டியடி கொடுத்து தயாரிப்பாளரைக் காப்பாற்றியுள்ளது என்பதையும் விளக்குகிறது.

கடந்த நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “ஒளடதம்” திரைப்படம், மீதான தடையை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியுள்ளது.

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஒளடதம்”.

நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில கயவர்களின் உண்மைக்கு மாறான தவறான சித்தரிப்புகளால் சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்தது.

பணத்தாசை பிடித்த அதுவும் சினிமாக்காரர்களை ஏமாற்றி பணம் பண்ணிவிடலாம் என்று எண்ணிய சிலர் திட்டமிட்டு செய்த சதியே இத்தடைக்குக் காரணம்.

இப்படத்தைத் தயாரித்த நேதாஜி பிரபு ஒரு சிறிய தயாரிப்பாளர். இந்த படத்தை அவரே கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இயக்குநர் ரமணி மலையாளத் திரை உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான டி.வி.சந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

தங்கள் கனவுகளையும் கற்பனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போராடி வாழ்க்கையைத் துச்சமாக மதித்து சினிமா ஒன்றையே உயிர்மூச்சாக எண்ணிப் பாடுபடும் எத்தனையோ தயாரிப்பாளர் இயக்குநர் வரிசையில் இவரும் ஒருவர்.
அப்படித்தான் ஒளடதம் படமும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் குடும்ப வியாதி என்று சொல்லத்தக்க எழுபது மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வியாதிக்கான மாத்திரை தயாரிப்பில் நடைபெறும் சமூக விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரைப்படம்தான் “ஒளடதம்”.

தயாரிப்பாளரே இப்படத்தை வெளியிடத்தயாராய் இருந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சிலர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துத்
தடை செய்து விட்டனர்.

இந்த சமயத்தில்தான் கோடிகளில் ரூபாயைக் கொடுத்து படத்தை வாங்கியுள்ளதாகப் பொய்ப்பத்திரங்கள் தயார் செய்து, படம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி மேற்படி அஜ்மல்கான் கோஷ்டியினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டனர்.

தயாரிப்பாளர் அளித்திருந்த லைசென்ஸ் போட்டோ காப்பியில் உள்ள அட்டஸ்டேஷன் கையெழுத்துக்கு மேல் கோடிகளில் ரூபாயைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எழுதி நீதிமன்றத்தில் காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட கிரிமினல் வேலைகள் நடப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதன்முறையாகும்.

எத்தனையோ போராட்டங்களுடன் படத்தை எடுத்து முடித்த நேதாஜி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதி அரசர் முன்னால் தனது பக்கத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லி கடந்த நான்கு மாதங்களாகப் போராடி இப்பொழுது வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த போன்ற சில இதையே தங்களது தொழிலாக வைத்துக்கொண்டுள்ளனர் என்றும் இனிமேல் குறிப்பிட்ட இந்த விஷக்கிருமிகளுடன் எந்தவிதத் தொடர்பும் தமிழ்த்திரையுலகினர் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் நீதி அரசர் தனது தீர்ப்பில் எழுதி அவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த் படம் குறித்து நேதாஜி பிரபு தெரிவிக்கையில், விரைவில் ஒளடதம் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

Related