Tuesday, April 21
Shadow

இளைஞர்களை குறிவைக்கும் செம போதை ஆகாதே படக்குழு

பாணா காத்தாடி’ ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஹீரோ அதர்வாவுக்கு மட்டுமின்றி இயக்குநர் பத்ரி வேங்கடேஷுக்கும் அதுதான் அறிமுகப் படம். இத்தனை ஆண்டுகளில் அதர்வா, பத்து படங்களுக்கு மேல் செய்துவிட்டார்.

ஆனால் – இயக்குநருக்கு அடுத்தபட வாய்ப்பு இப்போதுதான் அமைந்திருக்கிறது. அதுவும் தன்னுடைய முதல்பட ஹீரோவான அதர்வாவை வைத்தே அடுத்த படமும் இயக்குகிறார். அதுதான் ‘செம போத ஆகாதே’.
“படத்தோட தலைப்புலே மட்டுமல்ல. கதை, திரைக்கதையிலும் கிறங்கடிக்கிற சமாச்சாரங்கள் ஏகத்துக்கும் இருக்கு. ஆனா, யாரும் முகம் சுழிக்கிற மாதிரியான விஷயங்கள் எதுவும் இருக்காது” என்று நம்பிக்கையோடு பேச ஆரம்பித்த பத்ரி வேங்கடேஷ், முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று விளக்க ஆரம்பித்தார்.

“நானும், அதர்வாவும் இணைஞ்சிக் கொடுத்த ‘பாணா காத்தாடி’ ஓக்கேங்கிற அளவுக்கு ஓடிச்சு. அதுக்கு பிறகு திரும்பவும் அதர்வாவை வச்சி இன்னொரு படம் தொடங்க இருந்தேன். எல்லா ஏற்பாடுகளும் முடிஞ்சிருச்சி. அந்த படத்தை கதைப்படி முழுக்க வெளிநாடுகள்ல ஷூட்டிங் நடத்தியாகணும். அதுல ஒரு சிக்கல் வந்து படம் தொடங்க முடியல. அப்போதான் ஏகப்பட்ட டிவி ஷோ டைரக்ட் பண்ற வாய்ப்புகள். ஸோ, அந்தப் பக்கம் போக வேண்டியதாயிடுச்சி. தொடர்ந்து பல ஷோக்களை இயக்கினேன். மும்பை போயிட்டு அங்கேயும் இதுலதான் பிசியா இருந்தேன். இடையில நேரம் கிடைச்சப்போ அதர்வாகிட்ட இந்த பட கதையை சொன்னேன். அவருக்கு பிடிச்சிருந்தது. நேரம் காலம் அமைய படத்தை எடுத்தும் முடிச்சிட்டோம்.”

“இந்தப் படத்துக்காக அதர்வாவே தயாரிப்பாளரா ஆயிட்டாரே?”
“அதர்வா கதை ஓகே பண்ணினதும் சில தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னேன். சில காரணங்களால தாமதமாகுற மாதிரி இருந்துச்சு. அப்போ அதர்வா, இந்த படத்தை நானே தயாரிக்கிறேன்னு சொல்லிட்டார். கதை மேல அவருக்கு இருந்த நம்பிக்கைதான் அதுக்கு காரணம்.

‘செம போத ஆகாதே’ன்னு தலைப்பு வச்சதுக்கு காரணம், ஓவரா போதை ஆயிடக்கூடாது. அப்படி ஆயிட்டோம்னா தப்பு பண்ணிடக் கூடாதுங்கிற ஒன்லைன்தான் ஸ்டோரி. அதை முழுக்க ஷேப் பண்ணி பக்கா யூத் என்டர்டெயின்மென்ட்டா திரைக்கதையை கொடுத்திருக்கேன். குடிக்கவே கூடாது. அப்ப ஒருவேளை குடிச்சா, அதுவும் ஓவரா குடிச்சிட்டா, குறைஞ்சது ரெண்டு மணி நேரம் நாம நாமளா இருக்க மாட்டோம். அந்த சமயத்துல சின்னதா பண்ற ஒரு தப்பு எப்படி ஹீரோவோட வாழ்க்கையை புரட்டி போடுதுங்கிற கதை. அதுக்காக இது போதைக்கு ஆளாகாதீங்கன்னு மெசேஜ் சொல்ற படம் எல்லாம் கிடையாது. 150 ரூபா டிக்கெட் காசு கொடுத்துட்டு தியேட்டருக்கு இன்னிக்கு வர்றது யூத் ஆடியன்ஸ்தான். அவங்களை திருப்திப்படுத்தணும். அது மட்டுமே இந்த படத்தோட நோக்கம். முழுக்க முழுக்க ஐடி பசங்களையும் காலேஜ் பசங்களையும் டார்கெட் பண்ணின படம்தான். படத்தோட ஜானர், திரில். பாப்கார்ன் சாப்டுட்டே ரசிக்கிற மாதிரி சீன் பை சீன் விறு விறுப்பு இருக்கும்.”

“யூத் ஆடியன்ஸ், போதை, தப்பு தண்டான்னு நீங்க சொல்றத பார்த்தா அந்த மாதிரி சமாச்சாரங்கள் நிறைஞ்சிருக்கும் போலிருக்கே?”
“கண்டிப்பா இருக்கும். ஆனா, எல்லாமே இலைமறை காயாகத்தான் இருக்கும். நான் தனியா போயிட்டு படம் பார்த்தாலும் முகம் சுழிச்சிடக்
கூடாதுன்னு பார்ப்பேன். அதுதானே சரி. அதனால படத்துல அந்த மாதிரி விஷயங்களும் இருக்கு. ஆனா எதுவுமே அபத்தமா இருக்காது. இப்போ டபுள் மீனிங் பற்றியும் கேட்கிறாங்க. இன்னிக்கு ஏதுங்க டபுள் மீனிங்? எல்லாமே சிங்கிள் மீனிங்தான். டைரக்டா எல்லாமே பேசுறாங்க. இந்த படத்தை பொருத்தவரை ஃபன் ஃபீல் படம்னுதான் சொல்லணும். இன்னிக்கு மக்களோட வாழ்க்கை ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்கு. அதுலேருந்து விடுபட்டு, டைம்பாஸ் பண்றதுக்கு தியேட்டர் வர்றாங்க. அவங்களை சந்தோஷப்படுத்துற எல்லா விஷயமும் தர முயற்சி பண்ணிருக்கேன்.”

“இப்போ எல்லா படத்துலேயும் ரெண்டு ஹீரோயின் இருந்தே ஆகணும்னு மோடி ஏதாவது சட்டம் போட்டுட்டாரா என்ன?”
“ஹா.. ஹா… ஆடியன்ஸ் எதிர்ப்பார்க்கிறாங்களே? நம்ம படத்துலே மிஷ்டி சக்ரவர்த்தி, மெயின் ஹீரோயின். அவங்கதான் அதர்வாவுக்கு ஜோடி. பெங்காலி பொண்ணு. பாலிவுட் ஷோமேன் சுபாஷ் கய் சார் அறிமுகம். இந்த படம் மூலமா தமிழுக்கு வர்றாங்க. ரொம்பவே துள்ளலான ஒரு கேரக்டர். அவங்க அழகு மட்டுமில்ல, துரு துரு நடிப்பும் இளைஞர்களை கவரும். இன்னொரு பொண்ணு, அனைகா சோட்டி. தெலுங்குல பிசியா நடிச்சிட்டு இருக்கிறாங்க. செக்ஸ் ஒர்க்கரா நடிச்சிருக்காங்க. படத்துல இவங்களோட ரோல் ரொம்பவே பவர்ஃபுல்லா இருக்கும். மிஷ்டியை விட இவங்களோட காட்சிகள்தான் அதிகமா இருக்கும். கருணாகரன், ஜான் விஜய், மனோபாலா, தேவதர்ஷினி, சேத்தன் நடிச்சிருக்காங்க. வில்லனா அர்ஜய் நடிச்சிருக்கார். இவர் ‘தெறி’, ‘பண்டிகை’, ‘எமன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ன்னு நிறைய படங்கள் நடிச்சிருக்கார். இப்போ இதுலதான் மெயின்
வில்லனா வர்றார்.”

“படத்தோட அறிவிப்பு வந்து ரொம்ப நாளாகுது. ஏன் இவ்வளவு லேட் ரிலீஸ்?”
“நம்ம இண்டஸ்ட்ரியோட சூழலும் ஒரு காரணம். ஆனா கோலிவுட்டை பொருத்தவரை, படம் தாமதமாகுறது இன்னிக்கு சகஜமான ஒண்ணுதான். ஜனங்களுக்கு அது எல்லாம் தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சது, எப்போ என்ன படம் வந்தாலும் அது நல்லா இருக்கணும். நல்லா இருந்தா அவங்க அதை கொண்டாடுவாங்க. எல்லா படத்துக்குமே குறிப்பிட்ட ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்கள அந்த படம் சரியா ரீச் பண்ணணும். அதுதான்
மார்க்கெட்டிங் டெக்னிக். அதை சரியா பண்ணிட்டா, படம் எப்போ வந்தாலும் ஒர்க்அவுட் ஆகும். என் படம் லேட்டானாலும் இதுல இன்னிக்கு நடக்கிற விஷயங்கள்தான் டயலாக்லேயும் காட்சிகள்லேயும் கேட்கவும் பார்க்கவும் முடியும். எதுவுமே அவுட்டேட்டா இருக்காது. அந்த
அளவுக்கு தாமதமும் ஆகல.”

‘தயாரிப்பாளரா அதர்வாவோட தலையீடு ஏதாவது?”
“நாங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள். ‘பாணா காத்தாடி’ பண்ணும்போதே அவ்வளவு ஜாலியா ஒர்க் பண்ணினோம். அப்போவே அடுத்த படமும் சேர்ந்து பண்ண இருந்ததையும் சொன்னேனே. இப்போ இந்த படம் பண்ணும்போதும் அதே நட்போடுதான் பழகினோம். அவர் சினிமாவை நேசிக்கிறவர். எப்போ பார்த்தாலும் சினிமாவை பற்றிதான் பேசுவார். ஷூட்டிங் இல்லாதப்போ ஏதாவது படம் பார்த்துட்டே இருப்பார். அது பற்றி நிறைய பேசுவார். அப்பா பெரிய நடிகர். சினிமா குடும்பத்துலேருந்து வந்ததால அவருக்கு படம் பண்ற விஷயங்களும் தெரியும். நான் படத்துக்கு ஏதாவது கேட்கிறேன்னா, தன்னோட படத்துக்கு இது எல்லாம் தேவைன்னு அவருக்கும் தெரியும்தானே. இந்த காட்சி, இந்த அளவுக்கு வர்றதுக்கு இதுபோல செலவு பண்ணணும்னு அவருக்கே தெரியும். அதனால தலையீடுன்னு புரொடக்‌ஷன் சைடுலேயும் எதுவும் கிடையாது. கிரியேட்டிவ் சைடுலேயும் எதுவும் கிடையாது.”

‘டெக்னீஷியன் டீம் எப்படி?”
‘நான் கேட்ட மாதிரி நல்ல ஒரு டீமை கொடுத்த அதர்வாவுக்கு நன்றி சொல்லணும். பாடல்கள்லேயும் சரி, பின்னணி இசைலேயும் சரி, யுவன் ஷங்கர் ராஜா தி பெஸ்ட் கொடுத்திருக்கார். பீட்சா, ஆம்பள, எனக்குள் ஒருவன் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணின கோபி அமர்நாத், இதுல கேமரா. பிரவிண் எடிட்டிங். என்னோட ரைட்டர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், வசனங்களை எழுதியிருக்கார். திலீப் சுப்பராயன் ஸ்டன்ட். இன்னும் பட்டியல் நீளுது. இப்படி இந்த எல்லா டெக்னீஷியன்களும் இந்த படத்துக்காக கடுமையா உழைச்சிருக்காங்க. இவங்க இல்லேன்னா இந்தப் படமே இல்லை.”

“திரும்ப டிவி பக்கம் போயிடுவீங்களா?”
“அப்படியான ஐடியா இல்லை. சினிமாதான். அடுத்தப் படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. எல்லாம் சரியா அமைஞ்சி, கூடிய சீக்கிரமே அடுத்த படத்தை ஆரம்பிச்சிடுவேன். இனிமே என் கவனம் முழுக்க சினிமாவுலேதான் இருக்கும்.”