
காட்டுவழியாக செல்லும் அரசர் வேடர் குலத்தை சேர்ந்த பெண்ணை பார்த்தவுடன் காதல்வயப்படுகிறார். அந்த பெண்ணின் தந்தையிடம் பேசி அவளை திருமணமும் செய்துகொள்கிறார். பின்னர் அவளுக்காக அந்த காட்டுக்குள்ளேயே செண்பக கோட்டை ஒன்றை கட்டிக் கொடுத்து, அவளை அதற்கு அரசியாக முடிசூட்டி விட்டு தனது நாட்டுக்கு திரும்புகிறார்.
இவர் சென்ற நேரம், எதிரிகள் இவரது நாட்டை சூழ்ந்துவிடுகின்றனர். இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றன சூழ்நிலை உருவாகிறது. இதனால், உயிரை காப்பாற்றிக் கொள்ள செண்பக கோட்டைக்கு வருகிறார். செண்பக கோட்டையில் அரசியாக இருக்கும் வேடர் குலத்து பெண், அரசனின் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டு, பேயாக மாறி அந்த கோட்டையையும் மன்னனையும் காப்பாற்றி வருகிறாள்.
பின்னர், பல நூறு வருடங்களுக்கு பிறகு கதை நகர்கிறது. செண்பகக் கோட்டையில் வசித்து வந்த அனைவரும் இறந்துபோக அந்த கோட்டையே பாழடைந்து போகிறது. ஆனால், அந்த பெண்ணின் ஆவி மட்டும் அந்த கோட்டையை சுற்றி வருகிறது. இந்நிலையில், அந்த ஆவியை சாந்தப்படுத்துவதற்காக கோட்டையின் வாயிலில் காளி கோவில் ஒன்றை நிறுவி, அந்த கோவிலில் பூஜை செய்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
கணவனை இழந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், செண்பக கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை அபகரிக்க நினைக்கும் நரேன், அதை செய்ய முடியாததால் ஜெயராம் உதவியை நாடுகிறார். ஜெயராமும் பணத்துக்காக அதை செய்ய முடிவெடுக்கிறார்.
அதற்காக செண்பகக் கோட்டைக்கு செல்லும் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவளது குழந்தையிடம் நல்ல விதமாக பழகி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறார். ஒருகட்டத்தில் ரம்யா கிருஷ்ணனையும் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு செண்பகக் கோட்டைக்கு சொந்தமான நிலங்களின் பத்திரங்களை எல்லாம் தன் பெயரில் மாற்றிக் கொண்டு இவர்களை விட்டு செல்கிறார்.
ஜெயராம் சென்றதும் ரம்யா கிருஷ்ணனின் மகள் இறந்து போகிறாள். ரம்யா கிருஷ்ணனும் என்ன ஆனாள் என்று தெரியவில்லை. சில ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜெயராமுக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், ஒரு ஆவி இவர்களது குடும்பத்தை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. இதனால், சாமியாரான ஓம் பூரியை நாடுகிறார் ஜெயராம். அவர் மூலமாக, ரம்யா கிருஷ்ணன் மகளுடைய ஆவிதான் இவரது குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார்.
இறுதியில், அந்த ஆவியிடமிருந்து ஜெயராம் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அல்லது ஆவி இவரது குடும்பத்தை பழி வாங்கியதா? என்பதே மீதிக்கதை
ஜெயராம் இரு விதமான கெட்டப்புகளில் வந்து அசத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் வரும்போது இளமையான தோற்றத்திலும், அதன்பிறகு, ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு தாடி லுக்கிலும் பார்க்க ரொம்பவும் அழகாகவே இருக்கிறார். தனக்கே உரித்த தனி பாணியில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் வேடமேற்று நடிப்பதற்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் வழக்கம்போல் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயராமின் குழந்தையாக நடித்துள்ள சிறுமியும், ரம்யா கிருஷ்ணனின் குழந்தையாக வரும் சிறுமியும் குறை சொல்லமுடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
‘ஆடுகளம்’ நரேன் ஒரேயொரு காட்சியில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்துக்கும் பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும், அழகான கதாபாத்திரம், அதை உணர்ந்து செய்திருக்கிறார். சாமியாராக வரும் ஓம் பூரி ஆர்ப்பாட்டமில்லாத, அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தில் மூன்று விதமான கதைகளை சொல்லி, அதை ஒவ்வொன்றுக்கும் தொடர்புபடுத்தியிருக்கிறார் இயக்குனர் தாமரைக்குளம் கண்ணன். படத்தின் முதல் பாதியிலேயே கதையை சொல்லி முடித்துவிடுகிறார். அதன்பிறகு, படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தால், ரம்யா கிருஷ்ணன் – ஜெயராம் காதல், அதைத் தொடர்ந்து துரோகம், திரில் என படத்தை கொண்டு போய் ரசிக்க வைத்திருக்கிறார்.
ரத்தீஷ் வேகாவின் இசையில் ரம்யா கிருஷ்ணன் ஆடிப் பாடும் சாமி பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜித்து தாமோதரின் ஒளிப்பதிவு காட்சிகளை ரொம்பவும் அழகாக படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ‘செண்பகக் கோட்டை’ சுற்றி பார்க்கலாம்.