
‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைத் தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் ‘விஜய் 62’ என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய க்ரீஷ் கங்காதரன், இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். தேசிய விருதுபெற்ற ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஆர்ட் டைரக்டராக சந்தானம் பணியாற்றுகிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.
‘விஜய் 62’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பரதன் இயக்கிய ‘பைரவா’ படத்தில், முதன்முதலில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸானது. ‘பைரவா’ ரிலீஸான ஒரு வருடத்திற்குள்ளேயே மறுபடியும் விஜய்யுடன் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருப்பதால், ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், கடந்த 19ஆம் தேதி பூஜையுடன் படம் தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய ‘கடல்’, கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘2.0’ படத்துக்கும் இவர்தான் வசனம் எழுதியுள்ளார்