
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம், 10 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இருவரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியால் இருவருக்குமே ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
மேகா என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதக் நடனத்தில் தேர்ச்சிபெற்ற இவருடைய கேரக்டர் பெயரும் மேகா என்று தகவல் கிடைத்துள்ளது. முதல் படத்திலேயே சொந்தப் பெயரில் நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா.
பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.
சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெற்றிருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 22) வேலூரில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது
