விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புத்திரை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான என். மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார்.
பின்னர் விஷால் பேசும்போது, ‘சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான். இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்றார் விஷால்.
ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போல் இருந்தது. விஷால் ஒரு சிறந்த நடிகர். நான் பேசுவதற்கு மேடை 2௦ வருடம் கழித்து தான் எனக்கு கிடைத்தது. இயக்குநர் மித்ரன் பேசுவதை பார்க்கும் போது நன்றாக இருந்தது. இளம் இயக்குநர் நிச்சயம் வெற்றி பெறுவார்’ என்றார்.