சென்னையில் அம்மா, அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராம் சரவணா. இவர் அஜித்தின் தீவிர ரசிகர். அதுபோல், மதுரையில் வாழ்ந்து வருகிறார் மற்றொரு நாயகன் ராஜ் சூர்யா. இவர் விஜய்யின் தீவிர ரசிகர். இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் சண்டைப்போட்டு வருகிறார்கள்.
இதை தன் நண்பர்களுடன் பகிர்கிறார் ராம் சரவணா. ஆனால் நண்பர்களோ, நாங்கள் எல்லாம் பேஸ்புக்கில் பெண்களை கரெக்ட் செய்கிறோம். நீ சண்டை போட்டுகிட்டு இருக்கிற என்று அவரை கிண்டல் செய்கிறார்கள்.
இதையடுத்து, தானும் ஒரு பெண்ணை காதலிப்பேன் என்ற சவால் விடுகிறார் ராம் சரவணா. ஒரு நாள் நாயகி ரெமோனா ஸ்டெபனி பார்த்து காதல் வயப்படுகிறார். முதலில் ராம் சரவணாவின் காதலை மறுக்கும் ரெமோனா பின்னர் காதலை ஏற்றுக் கொள்கிறார். ரெமோனா விஜய் ரசிகை என்பதால், தானும் விஜய் ரசிகர் என்று பொய் சொல்லி காதலித்து வருகிறார் ராம் சரவணா.
இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு வருகிறார் ராஜ் சூர்யா. இவரை நேரில் பார்க்கும் ராம் சரவணா அவரிடம் சண்டைபோடுகிறார். இருவரும் சண்டைப்போடும் காட்சி பேஸ்புக்கில் வெளியாகிறது. இதை கண்டு மிகவும் வருத்தமடைகிறார் ரெமோனா ஸ்டெபனி. மேலும் இவர்களின் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.
பின்னர் தான் சண்டை போட்டது காதலி ரெமோனாவின் அண்ணன் ராஜ் சூர்யா என்று ராம் சரவணாவிற்கு தெரிய வருகிறது. ரெமோனாவும் பொய் சொல்லி காதலித்ததாலும், அண்ணன் அடித்ததாலும் ராஜ் சூர்யாவை வெறுக்கிறார்.
இறுதியில் ராஜ் சூர்யாவும், ரெமோனாவும் ஒன்று சேர்ந்தார்களா? அஜித் – விஜய் என அடித்துக் கொண்டிருந்த ராம் சரவணா – ராஜ் சூர்யா இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
ராம் சரவணா – ராஜ் சூர்யா, இருவரும் அஜித்- விஜய் ரசிகர்களாக போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சொல்லப்போனால் அஜித், விஜய் ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான மோதலிலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி சம அளவிலான விசிறிகளாகவே வந்து ரசிக்க வைத்திருக்கின்றனர். விஜய் ரசிகையாக ரெமோனா கலக்கியிருக்கிறார். ராம் சரவணாவின் பெற்றோர்களாக வருபவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கின்றனர்.
விஜய், அஜித் ரசிகர்களை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். விஜய், அஜித் என இருவரும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களது ரசிகர்கள் அடிதடி, சண்டை என பிரச்சனை கிளப்பி வருகின்றனர். இவர்களின் ரசிகர்கள் இணைந்தால் எப்படி இருக்கும் என்று படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் வெற்றி மகாலிங்கத்துக்கு வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு இடையேயான பிரச்சனை மட்டுமில்லாமல் சமூக அக்கறையுடன் கருத்தையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதல், காமெடி என திரைக்கதை ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். அஜித், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இளைஞர்களுக்கான படமாக இதை உருவாக்கி இருக்கிறார்.
தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகியோர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் வலு சேர்த்திருக்கிறது. விஜய் கிரணின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.