Sunday, December 8
Shadow

“நீங்கள் தான் ஆண்டவன், நாம் தான் கடவுள்” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்தாவது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்தார். மத்திய சென்னை மற்றும் வட சென்னை ரசிகர்களை இன்று அவர் சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

1960 களில் மதராஸ் அரசியல், கல்வி, சூழல் என அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்ததை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

” என்னை பொறுத்தவரை இது மதராஸ் தான். 1960 களில் காவல் துறை, வழக்கறிஞர், பல்கலைகழக கல்லூரிகள், போக்குவரத்து, அரசாங்கம் என்றால் மதராஸ் மாதிரி இருக்க வேண்டும் என்ற கருத்து அப்பொழுது அண்டை மாநிலங்களில் இருந்தது. எப்படி இப்பொழுது சிங்கப்பூர் அரசாங்கம் பற்றிய ஒரு பிரம்மாண்ட பார்வை உள்ளதோ, அப்போது அதே போன்றதொரு பார்வை அண்டை மாநிலங்களில் மதராஸ் மீதான பார்வையாக இருந்தது.

1973 களில் நான் மதராஸிற்கு வந்தேன். எனது அண்ணன் சத்யா நாரயணன் 14 வயதிலேயே எனக்காக வேலைக்கு சென்றார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். என்னை பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படிக்க வைக்க அவர் சம்பளத்தில் பாதியை எனக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர் கார்ப்பரேஷனில் மேஸ்திரியாக பணியாற்றினார், சம்பளம் 70 ரூபாய் தான். என் மீதிருந்த நம்பிக்கையில் நான் நடிகனாவேன் என்பதற்காக மிகவும் கஷ்டப்படிருக்கிறார். அவர் தான் என்னுடைய தெய்வம்.

அதன் பிறகு ராஜ்பகதூர், என்னுடைய நண்பன். எனக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்தவன். அதன் பிறகு மதராஸ் வந்த போது முரளி பிரசாத் மற்றும் விட்டல் வீட்டில் இருந்தேன் , என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் பார்த்துக் கொண்டார்கள். பல மேடைகளில் பால சந்தர் சார் பத்தி பேசியிருக்கிறேன். நடிப்பதற்காக ஆடிசனுக்கு சென்ற போது தமிழ்,ஆங்கிலம் இரண்டுமே தெரியாது. ஆனாலும், என்னை நடிக்க சொன்னார். நடித்து முடித்த பிறகு ஏதோ யோசித்துவிட்டு என்னை அவரது அடுத்த மூன்று படங்களில் புக் செய்தார். அபூர்வ ராகங்களில் ஒரு சின்ன வேடம், பிறகு மூன்று முடிச்சு படத்தில் ஒரு நல்ல ஆண்டி ஹூரோ ரோல். பால சந்தர் சார் என்னை தத்து எடுக்கவில்லை அவ்வளவு தான் கைலாஷ் , பிரசன்னாவிற்கு பிறகு ரஜினிகாந்த். என்னை அவர் மகனாக பார்த்துக் கொண்டார். அதன் பிறகு பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், வாசு இவர்கள் அனைவரும் என்னை ஸ்டார் ஆக்கினார்கள். சுரேஷ் கிருஷ்னா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள். இயக்குனர் சங்கர் என்னை இந்தியா முழுவதும் தெரியும் படி செய்தார். இவர்கள் அனைவரும் என்னை நம்பி இவ்வளவு பணம் போடுவதற்குக் காரணம் என் ரசிகர்களாகிய நீங்கள் தான். ” என்று கூறினார்.

மேலும், ” என் வாழ்க்கையில் 2.0 மிகவும் முக்கியமான படம். இதற்கு பிறகு சங்கரே நினைத்தாலும் இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதைக்கரு மிகவும் அற்புதமாக உள்ளது. 3டி படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளில் படம் தாமதமாகிறது. 2.0 ஏப்ரலில் வெளியாகிறது. அதற்கடுத்து நான் நடிக்கும் காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் காலா. அந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. 2.0 வெளியான ஓரிரு மாதங்களில் காலா வெளியாகும். ” என்று அவர் கூறினார்.

“என் வாழ்க்கை பயணத்தில், போன என் உயிரை சிங்கப்பூரில் இருந்து உங்கள் மூலமாக கொண்டு வந்துள்ளேன். என் உடல் நிலை சரியில்லாத போது எனக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகள் தான் அதற்கெல்லாம் காரணம். இத்தனை அன்பிற்கும் நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. அப்போது ரசிகர்கள் எழுதிய கடிதங்களில் ஒருவர் எழுதியிருந்தார். தலைவா நீங்கள் படம் நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டாம், அரசியலுக்கு வந்து எங்களை காக்க வேண்டாம், நலமுடன் திரும்பி வந்தால் போதும் என்று எழுதியிருந்தார். உங்கள் அன்பிற்கு எதை நான் திரும்ப கொடுக்க முடியும். ”

“கனவு நனவாக ஒரு போதும் குறுக்கு வழிகளை கையாலக் கூடாது என்றும், எந்த நிலையிலும் குடும்பம் தான் முக்கியம். பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பதை விட, நாமே நம்மை முதலில் மதிக்க வேண்டும். ” என்று அவர் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

Leave a Reply