Sunday, June 7
Shadow

“கே.ராஜன் விட்டுச் சென்ற துணிச்சலான குரலை யார் தொடரப் போகிறார்கள்?” – நினைவேந்தல் கூட்டத்தில் எழுந்த கேள்வி!

“கே.ராஜன் விட்டுச் சென்ற துணிச்சலான குரலை யார் தொடரப் போகிறார்கள்?” – நினைவேந்தல் கூட்டத்தில் எழுந்த கேள்வி!

 

தமிழ் சினிமாவில் அதிகாரம், பணம், அரசியல் என எந்த அழுத்தத்திற்கும் தலைவணங்காமல் உண்மையை உரக்கப் பேசிய சிலருள் ஒருவர் கே.ராஜன். ஆனால் இன்று அவர் இல்லை. கேள்வி என்னவென்றால் – தமிழ் சினிமாவில் சிறு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக இனி யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?

இந்தக் கேள்வியே சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கே.ராஜன் நினைவேந்தல் நிகழ்வில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

கடந்த மே 17ஆம் தேதி காலமான தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜனின் திருவுருவப் படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “திருட்டு விசிடிக்கு எதிராக சட்டை இல்லாமல்கூட போராட்டம் நடத்திய துணிச்சல் கே.ராஜனுக்கு இருந்தது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக அவர் எடுத்த போராட்டங்களும் வாதங்களும் எண்ணிலடங்காதவை. அவருடைய மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசும்போது, “எந்த பிரச்சினையாக இருந்தாலும் கே.ராஜன் போராடுவார். எந்த மேடையிலும் தனது கருத்தை தைரியமாகச் சொல்வார். சினிமாவில் அவரைப் போன்ற மனிதர்களை அரிதாகவே பார்க்க முடியும்” என்று நினைவுகூர்ந்தார்.

உணர்ச்சிகரமான தருணமாக மாறியது அவரது மகள் ராஜேஸ்வரி அன்புவின் உரை. “துணிச்சல், நேர்மை, போராட்ட குணம் – இந்த மூன்றின் உருவமாகவே எங்கள் அப்பா வாழ்ந்தார். இன்று அவர் உடலால் இல்லை என்றாலும், அவர் கற்றுக்கொடுத்த தைரியம் எங்கள் குடும்பத்தினருடன் என்றும் இருக்கும்” என்று கண்கலங்கிப் பேசினார்.

நிகழ்வின் மையக் கவனமாக இருந்தது டாக்டர் ஐசரி கே.கணேஷின் உரை. கே.ராஜன் தனது குடும்பத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவை நினைவுகூர்ந்த அவர், “என் தந்தை ஐசரி வேலனின் பள்ளித் தோழர் கே.ராஜன். இன்று நான் நடத்தும் கல்வி நிறுவனங்களின் விதையைப் போட்டவரும் அவர்தான். அவர் கேட்ட எதற்கும் நான் இல்லை என்று சொன்னதில்லை. அவர் இல்லாவிட்டாலும், அவர் இருந்தால் இந்த சங்கத்திற்காக என்ன செய்திருப்பாரோ அதை நான் தொடர்ந்து செய்வேன்” என்று உறுதியளித்தார்.

சிறு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் பிரச்சினைகளை இறுதிவரை வெளிப்படையாக பேசிய கே.ராஜனின் குரல் இனி கேட்கப்படாது. ஆனால் அவரது சிந்தனைகளும் போராட்ட மனப்பான்மையும் தொடருமா? அவரைப் போன்ற துணிச்சலான குரல் மீண்டும் உருவாகுமா?

நினைவேந்தல் கூட்டம் முடிந்த பிறகும் இந்தக் கேள்வியே பலரின் மனதில் பதிந்திருந்தது.