Thursday, May 23
Shadow

”ஜோக்கர்”- திரை விமர்சனம் (தமிழ் மக்களுக்கு இவன் ஜோக்கர் இல்லை புத்திசாலி 5/4

எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று 66-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது இந்தியா. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக வெளியில் சொல்லிக் கொள்ளும் இந்த நாடு இத்தனையாண்டு கால சுதந்திர காலத்தில் வல்லரசு நாடாக உருமாறியிருப்பதாக ஆள்பவர்கள் பெருமையாக பீத்திக் கொண்டாலும், இன்னமும் முக்கால்வாசி கிராமப்புற வீடுகளில் கழிவறை வசதிகூட இல்லை என்பதை யாரிடம் போய் சொல்வது..?

“செவ்வாய்க்கே ராக்கெட்விடப் போகிறோம்.. அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருக்கிறோம்..” என்று முட்டாள் அரசுகளும், மந்திரிகளும், முதலமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் இன்னமும் கிராமங்களில் வசிக்கும் இந்தியர்கள் கழிப்பறைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த பத்து அம்சத் திட்டத்தை 50 ஆண்டுகளாக அமல்படுத்தி பெருமளவுக்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய இதே அரசுகள்தான், இந்தக் கழிப்பறை விஷயத்தை இன்றுவரையிலும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.

தொட்டில் முதல் சுடுகாடுவரை ஊழல்.. இமயம் முதல் கன்னியாகுமரிவரையிலும் இந்தியாவின் ஒருமைப்பாடு லஞ்சம், ஊழல் என்கிற இரண்டு விஷயத்தில்தான் ஒன்றிப் போயிருக்கிறது.

அரசுகள் வைத்ததுதான் சட்டம். அமைச்சர்கள் சொல்வதுதான் விதி.. அதிகாரிகள் விதிப்பதுதான் விதிமுறை.. காவல்துறையினரின் கடமையே அதிகாரத் துஷ்பிரயோகம்தான்.. கவுன்சிலர் முதல் ஜனாதிபதி மாளிகைவரையிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இந்த நாட்டில் இதையெல்லாம் தட்டிக் கேட்கும் சாமான்யனின் குரல் ஒருபோதும் ஒலித்த்தில்லை.

ஒலிக்க ஆரம்பித்த குரலையும் ஒடுக்கிவிடுகிறார்கள்.. அல்லது அரசப் பயங்கரவாதம் என்று சொல்லி மரணிக்க வைத்துவிடுகிறார்கள். அப்படியொரு குரலை உயர்த்தியிருக்கும் மன்னர் மன்னன் என்கிற சாமான்யனின் கதைதான் இந்த ஜோக்கர் திரைப்படம்.

திருமண பந்தத்தில் நுழைய விருப்பம் கொண்டு, தான் பார்த்த பெண்ணையே மணக்க விரும்பி பெரும் போராட்டம் நடத்தி அப்பெண்ணின் மனதில் இடம் பிடிக்கிறார் மன்னர். அப்பெண்ணுக்கோ தான் வாழப் போகும் வீட்டில்  நிச்சயமாக கழிப்பறை இருக்க வேண்டும் என்று ஆசை.

”ஜோக்கர்” திரைப்படம் மிகச் சிறந்த அரசியல் விமர்சனப்படம், இன்றைய இந்திய அரசியலை சரியாக புரிந்துகொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. சமூகத்தின் அவலங்களையும் முரண்பாடுகளையும் நகைச்சுவை உணர்வோடும் நல்ல கதையைக் கொண்டும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.. உண்மையில் இந்த படத்திற்காக பாராட்டியே ஆகவேண்டும் அவரை..

எல்லா காட்சிகளையுமே மிக அழகாகவும் தெளிவாகவும் காட்சிப்படுத்துவதோடு தன்நல அரசியலையும் போலி மதவாதத்தையும் தோலுறித்து காட்டியுள்ளார்.. மக்களுக்கு உதவாத ஆன்மிகம் வெறும் ஏமாற்றுவேளையே தவிர வேறொன்றுமில்லை, நோய்களினால் வாடும் மக்களுக்கு உதவ முன்வராமல் சமயங்கள் வெறும் போதனையை மட்டுமே கொடுக்கின்றன என்ற உண்மை பதிவு செய்யப்பட்டுள்ளதில் எனக்கு மகிழ்ச்சி.

காவல்துறையும் நீதித்துறையும் வெறும் பெயரளவுக்குத் தான் இயங்குகின்றன. அந்த சிறிய அளவு இயக்கம்கூட அரசியல்வாதிக்காகவும் பணம்படைத்தோருக்காகவும் தான் என்கிறார் இயக்குநர்.. இலவசங்கள் மக்களை இழிவுபடுத்துவதோடு சோம்பேறிகளாகவும் மாற்றிவைத்திருக்கிறது என்ற அரசியல் பார்வை பாராட்டுக்குறியது.

கருவில் இருந்து கல்லறைவரை ஊழல் என்பது போய் கழிவறையிலும் ஊழல் என்று பார்வையை விரிவுபடுத்தியுள்ளார் இயக்குநர் ராஜு. ”தூய்மை இந்தியா” என்ற வெற்றுப் பிரச்சாரங்களினால் பயனேதுமில்லை என்ற கருத்தை துணிந்து பதிவு செய்திருக்கிறார். திறந்த வெளியில் மலம் கழிப்பதில் பெண்களுக்கு உள்ள இடையூறுகளை படம் போட்டுகாட்டியுள்ளார்.

எளிமையான நடிகர்கள் என்றாலும் ஆழமான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். மதுவைக் குடிக்கும் மனிதனின் உயிரை மது குடித்து விடுகிறது.. மரம் நடுபரை பார்த்து சிரிக்கிறோம் மணல் எடுக்கிறவனை பார்த்து கும்பிடுறோம். ஓட்டை காசுக்கு விற்பது பெற்றவளையும் கொண்டவளையும் விற்பதற்கு சமம் போன்ற கருத்துகளுக்காக சபாஷ் சொல்ல வைக்கிரார்.. சபாஷ் ராஜு முருகன்.

இந்திய அரசின் சட்டம் அகிம்சையை தாங்கி இருக்கிறது இருந்தும் அது ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி விடுகிறது, எனவே ஏழைகள் நீதிக்காக போராட இயலாது மீறி போராடினால் சாவு உறுதி என்கிறார் இயக்குநர் ராஜு. இருந்தும் அது ஒரு தொடர்போராட்டம் என்ற செய்தியோடு திரைகதையை முடித்திருக்கிறார்.

ஒரு சிறந்த படம் என்பது மக்களை தொந்தரவு செய்ய வேண்டும், அவ்வகையில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடு தான் மொத்தக் கூட்டமும் வெளியே வந்தன, அதில் நானும் ஒருவன்…

RANK 5/4

 

 

Leave a Reply