
ஏப்ரல் 7-ஆம் தேதியன்று வெளிவரவுள்ளது ’காற்று வெளியிடை’ திரைப்படம். இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் வெற்றிகரமான வெள்ளிவிழா ஆண்டில் இப்படம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. ரோஜாவில் தொடங்கிய இவர்களின் வெற்றிப் பயணம் ’காற்று வெளியிடை’யே கன ஜோராகச் சென்றுகொண்டிருக்கிறது. 🙂
வாழ்த்துக்கள் இருவருக்கும்!
இவ்வெற்றிக் கூட்டணியில் கவிஞர் வைரமுத்துவுக்கும் முக்கியப் பங்குண்டு. ஆம், ராஜாவின் கோட்டையிலிருந்து வைரமுத்து வெளிவந்தபின், தொடர்ந்து அவர் திரைத்துறையில் வெற்றியுலா வர ஏ.ஆர்.ஆரின் இசை பெரிதும் கைகொடுத்தது. கவிஞரும் அதனைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டு மக்களுக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவராய் இன்றுவரை இருந்துவருகின்றார். மெட்டுக்குப் பாட்டெழுதும் சங்கடமான சூழலிலும்கூடச் சங்கப்பாடல் வரிகளை அவ்வப்போது தன் திரைப்பாடல்களில் அவர் பயன்படுத்திவருவது பாராட்டுக்குரியது.
இருவர் படத்தில் வரும் “நறுமுகையே…” பாடலில்,
”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”
எனும் செம்புலப்பெயல்நீராரின் குறுந்தொகைப் பாடல் வரிகளைச் சற்றே மாற்றி, “யாயும் ஞாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன…
யானும் நீயும் எவ்வழி யறிதும் உறவு சேர்ந்ததென்ன” என்று எழுதியிருப்பார்.
’என் சுவாசக்காற்றே’ படத்தில் ’தீண்டாய்…மெய் தீண்டாய்!’ பாடலில்,
”கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குல்என் மாமைக் கவினே!” என்ற வெள்ளிவீதியாரின் குறுந்தொகைப் பாடலைத் தொகையறாவாகப் போட்டிருப்பார் (தொகையறா = பாடலுக்கு முன்னே வரும் நீண்ட விருத்தம்).
“கோச்சடையான்” படத்தில், “செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்”
எனத் தொடங்கும் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
அந்தப்பாடல்,
”கான மஞ்ஞை அறைஈன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.” எனும் கபிலரின் அரிய பாடலை அடியொற்றி எழுதப்பட்டது.
அந்த வரிசையில் இப்போது ”காற்று வெளியிடை” படத்திலுள்ள ”நல்லை யல்லை…நன்னிலவே நீ நல்லை யல்லை” எனும் வரி, நெடுவெண்ணிலவினார் எனும் சங்கப்புலவரின்,
”கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
என்ற குறுந்தொகைப் பாடலின் கடைசி வரியை உருவிச் சேர்த்ததே!
அன்று இளையாராஜாவின் பிடிவாதம் தான் இன்று நமக்கு இப்படி ஒரு இசை கூட்டணியும் இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கும் சாத்தியம் ஆனது ,
