Wednesday, October 28
Shadow

குற்றங்கள், ஊழல்களை தடுக்க செல்போன் செயலியை தொடங்கிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, செயல்படும் செயலியாக மையம் செயலியை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிக்க வேண்டும்.

பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியர்களும் செய்யத் தூண்டும் செயலி இது. இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில்.

அது எப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்க யாரும் கிடையாது. அந்த மையமாக மய்யம், மக்கள் நீதி மய்யம் செயல்படும். இது இருக்கும் குறைகளை ஒரே நொடியில் தீர்த்து விடும் மந்திரக்கோல் அல்ல. இது இருக்கும் குறைகளை செவிசாய்த்து கேட்பதற்கும், கண்கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒருகருவி.

காது வைத்து கேட்டால் நம் அவலங்களை கேட்கும், ஒரு ரீங்கரிக்கும் ஒரு கருவியாக இது இருக்கும். இது எங்களுக்கும், பிற்பாடு நாங்கள் நினைப்பது நடந்தால், செய்வதை செய்வதற்கு இந்த கருவி மூலம் எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம், எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும். நாங்கள் பரீட்சை எழுதும் நேரம் வரும் போது, அதற்கான பதில்களெல்லாம் இந்த கருவியின் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கும்.

தற்போதைக்கு இந்த செயலி, மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களின் கையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. தற்காப்பு கருதியும், மய்ய உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்பதாலும் தற்போதைக்கு உறுப்பினர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இது தீர்வுக்கான முதல் அடி.

இது போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அல்லது அவர்களை விமர்சனம் செய்யும் கருவியாக இருக்கும்.

மய்யம் செயலி நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. நாளை கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவேயில்லை என்றால் ஏன் என்பதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது ஒரு உபயோகமுள்ள கருவியாக இருக்கும். நாளை நாங்கள் தத்தெடுத்துக் கொண்ட அதியத்தூர் கிராமத்திற்கு செல்லவிருக்கிறோம் என்றார்