
ஏப்படி எங்களை டிவி சீரியல் பார்க்க வைத்துவிட்டீர்களே என்று சர்கார் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் விஜய் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் சர்கார் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
சர்கார் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் தமிழ்நாட்டு நேயர்கள் 250 பேருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு விமான டிக்கெட், ரூ. 2000 ரொக்கம், விழாவுக்கான டிக்கெட் இலவசம். இதை பெற திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 7 மணியில் இருந்து 9.30 வரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்.
சன் டிவி நிகழ்ச்சிகளின் நடுவே அரை மணிநேரத்திற்கு ஒரு முறை கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம். ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் சரியான பதில் அளிக்கும் நேயர்களில் 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி தேர்வு செய்யப்படும் 250 பேருக்கு சர்கார் இசை வெளியீட்டு விழாவை சன் பிக்சர்ஸ் செலவில் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்
