
சீனத் அமான் (Zeenat Aman, பி. நவம்பர் 19, 1951) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. பாலிவுட் திரைப்படங்களில், குறிப்பாக 1970கள் மற்றும் 1980களில் நடித்து புகழ்பெற்றவர். 1970களில் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது வெற்றியாளராகி பின் மிஸ் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார். இந்தித் திரைப்பட உலகிற்கு மேற்கத்திய கதாநாயகிகளின் தோற்ற அமைப்பை அறிமுகப்படுத்தி நிலையான தாக்கத்தை உண்டாக்கியவர். பாலிவுட்டின் கவர்ச்சிச் சின்னங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அமானுல்லா கான் என்ற முஸ்லிம் தந்தைக்கும், சிந்தியா என்ற இந்துத் தாயாருக்கும் மகளாக சீனத் அமான் பிறந்தார். அவரது தந்தை,[2] முகல்-எ-அசாம் மற்றும் பகீஜா போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். அவர் சீனத்துக்கு பதிமூன்று வயதான போது இறந்தார். அவரது தாயார் மிஸ்டர். ஹெய்ன்ஸ் என்ற ஜெர்மானியரை மணம் புரிந்து கொண்டார்; ஜெர்மனியக் குடியுரிமை பெற்று, அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார். சீனத் தமது பதினெட்டாவது வயதில் இந்தியாவிற்கு திரும்பினார்.

மும்பையில் செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின், மாணவர் உதவித் தொகையுடன் தனது படிப்பைத் தொடர கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இந்தியாவிற்கு திரும்பியதும், அவர் முதலில் பெமினா பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். பின்னர் வடிவ அழகியாகப் பணியாற்றினார். அவர் வடிவ அழகியாக விளம்பரம் செய்தவற்றுள், 1966ல் வெளியான தாஜ்மகால் தேநீர் மற்றும் டெலிவிஷன் எக்ஸ் ஆகியவற்றின் அறிமுக விளம்பரங்களும் அடங்கும். 1970 இல் மிஸ் இந்தியா போட்டியில் மூன்றாவது வெற்றியாளராக; பின்னர் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார்.

அமானின் கவர்ச்சியை வெளிப்படுத்தும் புதுமையான தோற்றம் அக்காலக் கட்டத்தில் பழமைசார் நட்சத்திரங்களினின்றும் மாறுபட்டு இருந்தது. காதலிகளாகவும், கீழ்ப்படியும் அடக்கமான மனைவிகளாகவும் கதாநாயகிகள் திரையில் தோற்றமளித்த காலகட்டத்தில், வேலை இல்லாத காதலனைக் கை விட்டுவிட்டு கோடீஸ்வரனை நாடிச் சென்ற சந்தர்ப்பவாதி- (ரோட்டி கப்டா அவுர் மக்கன்) , ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்வதற்காக தனது கருவைக் கலைக்கத் துணியும் பேராசை கொண்ட பெண் (அஜ்னபி) , மகிழ்ச்சியுடன் ஹூக்கா பிடிக்கும் பெண் (மனோரஞ்சன்) , பற்றுகளைத் துறந்த ஹிப்பி (ஹரே ராம ஹரே கிருஷ்ணா), தன் தாயாரின் முன்னாள் காதலரையே காதலிக்கும் பெண் (பிரேம் சாஸ்திரா) , கோபக்கார நொண்டிக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டும் பிறருடன் கள்ளத்தொடர்பு கொள்ளும் பெண் (துண்ட்) போன்ற சம்பிரதாயங்களுக்கு முரண்பட்ட பாத்திரங்களில் அமான் நடிக்க வைக்கப்பட்டார். இந்தப் பாத்திரங்களுக்கு ஈடாக, சோரி மேரா காம் , ச்சைலா பாபு, தோஸ்தானா மற்றும் லவாரிஸ் போன்ற மரபு சார்ந்த திரைப்படங்களிலும் அவர் நடித்தது, இந்திய சினிமாவில் ஒரு திருப்புமுனையாகப் பலராலும் கருதப்பட்டது.
அப்துல்லா படம் எடுக்கப்பட்ட சமயம் சஞ்சய்கானை (அப்பாஸ்) சீனத் மணம்புரிந்து கொண்டார். அத்திரைப்படம் முடிவுறும் காலத்தில், கொலாபா தாஜ் மஹால் ஹோட்டலில் நடந்த ஒரு தனிவிருந்தில் அவர் கலந்து கொண்ட போது, சஞ்சய் மற்றும் அவரது மனைவி சாரின் அவரைத் தாக்கியதில், அவரது விழி மோசமாக காயமடைந்தது- இந்த சம்பவத்தில் விருந்தினர் எவரும் தலையிடவில்லை .[5]

1980களில் அவர் மசார் கான் என்பாரை திருமணம் செய்துகொண்டார் அவர்களுக்கு அஜான், சஹான் என்ற இரு மகன்கள் உள்ளனர். மசார்கான் 1998 செப்டெம்பரில் சிறு நீரகச் செயலிழப்பால் இறந்தார். இன்று, அமான் தனது இரண்டு மைந்தர்களுடன் வசித்து வருகின்றார். பல சமூக நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார், திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிலும் பங்கு கொள்ளுகின்றார், வெள்ளித்திரையில் அரிதாகவே தென்படுகின்றார்.
