
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படம் ‘கனா’. அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சத்யராஜ், “படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தைக் கொண்டு சேர்ப்பார்கள். அதைப் புகழ்ந்து பேசி பயனில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக்கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார்.
சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது அது சினிமாவுக்கு நல்லது. அருண்ராஜா காமராஜ் அப்படிப்பட்ட ஒரு இயக்குநர். விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் எங்கு போனாலும் வெற்றிபெறும். இந்தப் படம் ‘தங்கல்’ மாதிரி சீனாவிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.
