
நசிருதீன் ஷா ஒரு தேசியத் திரைப்பட விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர். அவர், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 2003வது வருடம், இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த சேவைகளுக்காக, இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கிக் கௌரவித்தது.
நசிருதீன் ஷா இந்தியாவின் உத்திரப் பிரதேசம் என்னும் மாநிலத்தில் பராபங்கி என்னும் இடத்தில் பிறந்தார். அவர் பத்தொன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஆஃப்கன் மாவீரர் ஜன் ஃபிஷன் கான் என்பவரின் வம்சத்தில் வந்தவர்; மற்றும் எழுத்தாளர் இட்ரிஸ் ஷா, புகழ்பெற்ற பாகிஸ்தானிய நடிகர் சையத் கமல் ஷா, பாகிஸ்தான் உளவுத் துறையின் தலைமை இயக்குனர் ஷா மெஹபூப் ஆலம் மற்றும் மரப்பந்தாட்ட வீரர் ஓவைஸ் ஷா ஆகியோரின் உறவினரும் ஆவார். நசிருதீன் ஷான் தனது பள்ளிக் கல்வியை செயிண்ட் அன்ஸெல்ம்’ஸ் ஆஜ்மிர் பள்ளியிலும், பின்னர் நைனிடால், செயிண்ட் ஜோசஃப்’ஸ் கல்லூரியிலும் முடித்தார். 1971வது வருடம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலிருந்து கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார்; பின்னர் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார்.
அவர் வணிக ரீதியான பாலிவுட் திரைப்படம் மற்றும் இணைத் திரைப்படம் ஆகிய இரண்டிலுமே வெற்றி அடைந்துள்ளார். பல சர்வதேசத் திரைப்படங்களிலும், மிகவும் குறிப்பிட்டுக் கூறும் அளவில் சித்திரக் கதையின் ஹாலிவுட் தழுவலான தி லீக் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி ஜெண்டில்மென் என்னும் திரைப்படத்தில் காப்டன் நெமோ என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரது மூத்த சகோதரர் லெஃப்டினட் ஜெனரல் ஜமீருதின் ஷா, பிஎஸ்விஎம், எஸ்எம், விஎஸ்எம்மும் நைனிடால் செயிண்ட் ஜோசஃப் பள்ளியின் முன்னாள் மாணவர்தான். இவர் 2008வது ஆண்டின் துவக்கத்தில் இந்திய ராணுவத்தில் ராணுவப் பணியாட்கள் (திட்டமிடுதல் மற்றும் அமைப்பு) துணைத் தலைவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றார். இதற்கு முன்னர் அவர் திமாபுர் தளத்தின் 3 படைகளை வழி நடத்திச் சென்றுள்ளார். மேலும் 94வது வருடம் ஃபிப்ரவரி முதல் 97வது வருடம் ஏப்ரல் மாதம் வரை இவர் சௌதி அரேபியாவின் இந்திய பாதுகாப்புத் தூதுக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.
நசிருதீன் ஷா தமது நாடகக் குழுவுடன் புது டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் லாகூர் போன்ற இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நிகழ்தி வருகிறார். இஸ்மத் சௌக்டை மற்றும் சாதத் ஹஸன் மாண்டோ ஆகியோர் எழுதிய நாடகங்களை அவர் இயக்கியுள்ளார்.
ஒரு திரைப்பட இயக்குனராக அவர் அறிமுகமான யூன் ஹோத்தா ஹை தோ க்யா ஹோத்தா 2006வது வருடம் வெளிவந்தது. இந்தப் படத்தில் கொங்கனா சென் ஷர்மா, பரேஷ் ராவல், இர்ஃபான் கான் போன்று தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பல நட்சத்திரங்களுடன், புதுமுகம் ஆயேஷா டாக்கியா மற்றும் அவரது மகன் இமாத் ஷா ஆகியோரும் நடித்திருந்தனர்.
அவர் பாலிவுட் நடிகை ரத்னா பதக் ஷாவை மணந்துள்ளார். இவர்களுக்கு ஹீபா என்னும் ஒரு மகளும், இமாத் மற்றும் விவான் என்று இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் ஜானே து… யா ஜானே நா, மிர்ச் மசாலா, தி பர்ஃபெக்ட் மர்டர் போன்ற படங்களில் உடன் நடித்துள்ளனர்.
இதற்கு முன்னர், நசிருதீன் ஷா சுரேகா சிக்ரியின் சகோதரியான, இரானில் மருத்துவராக இருந்தவரை மணம் புரிந்திருந்தார். அவரது பெயர் மனரா சிக்ரி (உறுதிப்படுத்தப்படவில்லை) என்பதாக இருக்கலாம்.
ஹீபா ஷா, திரு ஷாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள். அவர் ரத்னா பதக் ஷாவின் மகள் அல்ல. ஹீபா ஷாவின் தாயார் இறந்ததற்குப் பிறகு, நசிருதீன் ஷா ரத்னா பதக்கை மணந்தார்.
