Monday, April 27
Shadow

நடிகர் பிரேம் நசீர் பிறந்த தின பதிவு

மலையாள நடிகர் என்றாலும், பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் பிரேம் நசீர். அவர் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தி, ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அவர் மொத்தம் 480 படங்களில் கதாநாயகனாக நடித்தது முதல் சாதனை. நடிகை ஷீலாவுடன் மட்டும் 101 படங்களில் ஜோடியாக நடித்தது, அடுத்த சாதனை. இவை இரண்டும், ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற்ற சாதனைகள்.
இவை தவிர, மேலும் சில சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார். இவர் ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகிகள் மொத்தம் 80 பேர்! ஒரே வருடத்தில் (1979) இவர் நடித்து வெளிவந்த படங்கள் 29.
ரேம் நசீர், 1929–ம் ஆண்டு ஏப்ரல் 7–ந் தேதி கேரளாவில் உள்ள செரியன்கேழு என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் சாகுல் ஹமீது. தாயார் அஸ்மா பீவி.
இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அப்துல் காதர். இவர் சிறுவனாக இருக்கும் போதே, தாயார் இறந்து விட்டார். கல்லூரியில் படித்து ‘பி.ஏ.’ பட்டம் பெற்ற பிரேம் நசீர், பெரிய வக்கீலாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் விதி இவரை வேறு பாதைக்கு இழுத்துச் சென்றது.
பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் போதே பிரேம் நசீர் நிறைய நாடகங்களில் நடித்து பாராட்டு பெற்றார். அந்தக் காலகட்டத்தில் 40 பள்ளிகள் பங்கு பெற்ற நாடக போட்டி ஒன்று நடந்தது. அதில், ஷேக்ஸ்பியரின் ‘‘வெனீஸ் வணிகன்’’ நாடகத்தில் ‘ஷைலக்’ வேடமேற்று நடித்து முதல் பரிசு பெற்றார்.
இவரது நடிப்புத்திறமையைக் கண்ட போல் கெல்லிங்டன் என்ற பட அதிபர் தனது ‘மருமக்கள்’ என்ற மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். 1952–ம் ஆண்டில் வெளிவந்த பிரேம் நசீரின் முதல் படம் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டிலேயே இவர் ‘விசபின் டெவில்லோ’ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான், அப்துல் காதர் என்கிற இவரது பெயரை ‘‘பிரேம் நசீர்’’ என்று மாற்றி அமைத்தார், பிரபல மலையாள நடிகரான திக்குரிசி சுகுமாரன் நாயர்.
இதன்பின் 1954–ம் ஆண்டில் திருவனந்தபுரம் மெர்ரிலாண்ட் ஸ்டூடியோவில் நீலா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘அவகாசி’ என்ற படத்தில், பிரேம் நசீர் நடித்தார். கதாநாயகியாக அவருடன் இணைந்து நடித்தவர் குமாரி. படம் வெற்றி பெற்றது.
உடனே இப்படத்தை, ‘அவன் யார்?’ என்ற பெயரில் தமிழில் ‘டப்’ செய்து திரையிட்டனர்.
இந்தப்படத்தில் பிரேம் நசீர் தனது முழுத்திறமையையும் பயன்படுத்தி இருந்தார். குதிரை சவாரி, கத்திச்சண்டை முதலான வீரதீரச் செயல்களிலும் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்றார்.
இந்தக் காலகட்டத்தில் திருவாங்கூர் சகோதரிகளான லலிதாவும், பத்மினியும் தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்று விளங்கினர். பிரேம் நசீரும், லலிதாவும் இணைந்து நடித்த ‘இருளுக்குப் பின்’ என்ற படம் பெரிய வெற்றி பெற்றது.
1956–ம் ஆண்டில் பிரேம் நசீரையும், குமாரியையும் ஜோடியாக நடிக்க வைத்து, ‘மந்திரவாதி’ என்ற படத்தை நீலா புரொடக்ஷன் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எடுத்தது. இரு மொழிகளிலும் படம் வெற்றி பெற்றது. இனிய பாடல்கள் நிறைந்த படம் இது.
இவர் நடித்த தமிழ்ப்படங்கள்
பிரேம் நசீர் அழகிய தோற்றம் கொண்டவர். எனவே, தமிழ்ப் பட உலகமும் அவருக்கு நல்வரவு கூறியது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்ப்பட உலகில் கோலோச்சி வந்த போது, பிரேம் நசீரும் பல தமிழ்ப்படங்களில் நடித்தார்.
1958–ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ படத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாகவும், பிரேம் நசீர் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்தனர்.
Jpeg
இதில் பிரேம் நசீர் பாடுவதாக அமைந்த, ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகில் இருக்கையிலே…’ என்ற பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது. பிரேம் நசீருக்கு பின்னணியில் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். பாடலுக்கு நடனம் ஆடியவர் ராஜசுலோசனா.
இப்படத்தை தயாரித்ததுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் ஏ.கே.வேலன். படம் மகத்தான வெற்றி பெற்றது. இதனால், தன் தந்தையின் பெயரால் ‘அருணாசலம் ஸ்டூடியோ’வை உருவாக்கினார்.
பிரேம் நசீர் நடித்த மற்ற தமிழ்ப்படங்கள்
நல்ல இடத்து சம்பந்தம், நான் வளர்த்த தங்கை, பெரிய கோவில், அருமை மகள் அபிராமி, உலகம் சிரிக்கிறது, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், ஒரே வழி, கல்யாணிக்கு கல்யாணம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சகோதரி, சொல்லு தம்பி சொல்லு, வண்ணக்கிளி, அன்புக்கோர் அண்ணி, இருமனம் கலந்தால் திருமணம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, தங்கம் மனசு தங்கம், தங்க ரத்தினம், திலகம், ஆஸ்திக்கோர் ஆணும் ஆசைக்கோர் பெண்ணும், பெற்றவள் கண்ட பெரு வாழ்வு, பாலும் பழமும், பிறந்த நாள், தென்றல் வீசும், எதையும் தாங்கும் இதயம், முரடன் முத்து, வழிகாட்டி முதலானவை.
பிரேம் நசீருக்கு ஜோடியாக தமிழ்ப்படங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், ராகினி. தமிழ்ப்படங்களில் பிரேம் நசீருக்கு பின்னணி பாடியவர்கள் டி.எம்.சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா.
தமிழில் அவர் பாடுவதாக அமைந்த காட்சிகளில், ‘மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா…’ (வண்ணக்கிளி), ‘இந்தப் பெண்கள் மனசே இப்படித்தான்…’ (நான் வளர்த்த தங்கை), ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ (ஒன்று பட்டால் உண்டு வாழ்வு), ‘இளவேனில் சந்திரிகையாய்’ (தந்தை), ‘மோகினியே என் மோகினியே’ (பசியின் கொடுமை) இப்படி பல பாடல்கள் இன்னும் ரசிகர்கள் மனதில் நிழலாடுகின்றன.
தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் 1964–ம் ஆண்டு வெளிவந்த ‘முரடன் முத்து’. மலையாளப் படங்களில் இடைவிடாமல் நடித்து வந்ததால் தமிழில் அழைப்பு வந்தும் அவரால் ஏற்க முடியவில்லை.
சிவாஜி கணேசன்
பிரேம் நசீர் நடித்த முக்கிய மலையாளப் படங்களில் ஒன்று ‘தச்சோளி அம்பு’. இந்தப்படத்தில், பிரேம் நசீருடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
(இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது, சிவாஜி கணேசன் உயரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார். அதனால் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டார்.)
‘தச்சோளி அம்பு’ பெரிய வெற்றிப்படம். இவர் நடித்த மலையாளப்படங்களில் ‘இருட்டின் டே ஆத்மாவு’, ‘படயோட்டம்’, ‘விலைக்கு வாங்கின வீணா’, ‘புஷ்பாஞ்சலி’, ‘பூந்தேனருவி’, ‘மந்தாரக் கொடி’, ‘நைட்டூட்டி’, ‘அபிமானம்’, ‘அச்சன்’ ஆகியவை பெரிய வெற்றிப்படங்கள்.
மலையாளப்படங்களில் இவருக்குப் பின்னணியில் பாடியவர் பெரும்பாலும் கே.ஜே.யேசுதாஸ்.
35 ஆண்டுகள்
மலையாள திரையுலகில், எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் வந்து போனாலும், 35 ஆண்டுகள் மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக பிரேம் நசீர் திகழ்ந்தார். பலவித கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் திறமை அவருக்கு இருந்தது. 33  படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
பிற்காலத்தில் அவர் கதாநாயகனாக நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
உலக சாதனை
பிரேம் நசீர் இரண்டு உலக சாதனைகள் புரிந்து, ‘கின்னஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். உலகத்திலேயே அதிக படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரேம் நசீர் தான். அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் 480.
ஒரே நடிகையுடன் ஜோடியாக அதிக படங்களில் நடித்த பெருமைக்கு உரியவரும் பிரேம் நசீர் தான். நடிகை ஷீலாவுடன் 101 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இது மற்றொரு உலக சாதனை. ஜோடியாக அல்லாது ஷீலாவுடனே மேலும் 19 படங்களில் நடித்துள்ளார்.
பிரேம் நசீருடன் ஜோடி சேர்ந்த மற்ற பிரபல நடிகைகள்: சாரதா, ஜெயபாரதி, குமாரி.  பிரேம் நசீரின் மற்றொரு சாதனை: 1979–ம் ஆண்டில் மட்டும் அவர் நடித்து மொத்தம் 29 படங்கள் வெளிவந்துள்ளன! அதாவது மாதம் 2 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.  புராணப்படங்களிலும் (ராமர், கிருஷ்ணன், அய்யப்பன், வேடங்களில்) நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்
பிரேம் நசீர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பிரசாரமும் செய்தார். ஆனால் தேர்தலில் நிற்கவில்லை. போட்டியிட டிக்கெட் கேட்டதில்லை. பின்னர் அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.  நிறைய படங்களில் நடித்த போதிலும், கேரள அரசின் பரிசை அவர் ஒரே ஒருமுறை தான் பெற்றுள்ளார்.   ஆனால் மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷண்’ ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்தது.
மனைவி–குழந்தைகள்
பிரேம் நசீரின் மனைவி பெயர் ஹபீபா பீவி. இந்த தம்பதிகளுக்கு லைலா, ரசியா, ரீட்டா என்று மூன்று மகள்கள். ஷாநவாஸ் என்று ஒரே மகன். இவர் சில படங்களில் நடித்துள்ளார். பிரேம் நசீரின் தம்பி பிரேம் நவாசும் நடிகர் ஆவார். இவர் சில படங்களில் நடித்த பின்பு படத்தயாரிப்பாளராக மாறினார். தன்னை வளர்த்து ஆளாக்கியது மலையாள சினிமா என்றாலும் தமிழ் சினிமா உலகின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார்.
உங்கள் புகழுக்கு காரணமானது கேரளமா? தமிழகமா? என்று 1960–ம் ஆண்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘இப்பொழுதுள்ள புகழுக்கு காரணம் தமிழகம் தான். இருப்பினும் சுமார் 82 படங் களுக்கு மேல் கேரளமும் என்னை நடிக்க வைத்து புகழடையச் செய்திருக்கிறது’ என்று சாமர்த்தியமாக பதிலளித்தார்.
தம்முடன் நடித்த கதாநாயகிகள் மீது நல்ல மரியாதை அவருக்குண்டு. அவர்களது தனித்திறமையையும், நடிப்பையும் அவர் பாராட்ட தயங்கியதே கிடையாது.
மலையாள திரைப்பட உலகில் ‘பொன்கதிர்’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த லலிதா தான் என் நடிப்பை முறைப்படுத்தினார் என்றும், நடிகை குமாரியை ஒரு ‘டிப்ளமடிக் கேர்ள்’ என்றும், நடிகை தங்கம் ‘வெள்ளை மனம் படைத்தவர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை அன்புடன் ‘தம்பி’ என்றழைக்கும் பி.எஸ்.சரோஜாவை தான் மனதார உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
ராஜசுலோசனா நாயகியாக நடித்த முதல் படம் ‘மனசாட்சி’. இதில் அவரது ஜோடி பிரேம் நசீர். ‘இவர் கொஞ்சம் முன்கோபி. ஆனால் திறமை கலந்த கலவை. என் மனைவியின் உயிர்த்தோழி. ஆகவே இவரை எதிர்த்தால் தப்பமுடியாது’ என்று நகைச்சுவையாக கருத்து கூறினார் பிரேம் நசீர்.
தனது அடுத்த சக நடிகையான எம்.என்.ராஜத்துக்கு பெரும் புகழாரம் சூட்டினார், பிரேம் நசீர். ‘ராஜம் தமிழ் பேசும் அழகோ அழகு. இவரது உச்சரிப்பை கூர்ந்து கவனித்து, நானும் தமிழைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறும் பிரேம் நசீர், ‘ராஜத்திற்கு நான் அன்புடன் சூட்டிய பெயர் ‘டயலாக் பாகவதர்’, இந்த பெயர் ஸ்டூடியோ வட்டாரங்களில் பிரபலமாகிவிட்டது’ என்கிறார்.
‘திருவிதாங்கூர் சகோதரிகளில் கடைக்குட்டியான ராகினி, செட்டிற்கு வந்துவிட்டால் ஒரே கலகலப்புத்தான். குழந்தையுள்ளம் படைத்தவர். சோர்வை அகற்றும் சிரிப்பு டானிக்கை பிறருக்குக் கொடுப்பதில் வள்ளல்’ என்று பிரேம் நசீர் வர்ணித்துள்ளார்.
மரணம்
ஓய்வு ஒழிச்சலின்றி நடித்த பிரேம் நசீரின் உடல் நலிவுற்றது. ‘பெப்டிக் அல்சர்’ நோயால் தாக்கப்பட்டு சென்னை மருத்துவ மனையொன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். போதாததற்கு அம்மையும் அவரைத் தொற்றிக் கொண்டது.
முடிவில் 1989–ம் ஆண்டு ஜனவரி 16–ந் தேதி தனது 60–வது வயதில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான செரியன்கேழுவுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த பிரேம் நசீர் இறுதிவரை இளமை குன்றாத எழில் கதாநாயகனாகவே இருந்தார். இதனால் மலையாள திரைப்பட ரசிகர்கள் இவரை ‘நித்திய ஹரித நாயகன்’ என்றும் ‘நித்திய வசந்தம்’ என்றும் அடைமொழியிட்டு அழைத்தனர்.
திரை உலகைத்தவிர தனிப்பட்ட வாழ்க்கையிலும் பண்பட்ட நெறிகளுடனே வாழ்ந்தார் பிரேம் நசீர். அவரது மனைவி ஹபீபா பீவி குன்றா குணநலன் பெற்ற பெண்மணி. பிரேம் நசீர் மேக்கப் போட்டுக் கொண்டால் சினிமா கலைஞராகவும், மேக்கப் கலைத்தால் அசல் குடும்பஸ்தராகவும் வாழ்ந்தார். எனவே, பிரேம் நசீரின் இல்லற வாழ்க்கை இனிமையாக அமைந்தது.
சினிமா உலகை ஆழ்ந்து ரசித்தவர் பிரேம் நசீர். ஒரு பேட்டியில் தன்னை மானசீகமாக கவர்ந்த நடிகை ‘நர்கீஸ்’ என்றும், தனக்கு பிடித்த நடிகை ‘சாவித்திரி’ என்றும் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் ஓர் ஒப்பற்ற கலைஞரென்று பிரேம் நசீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரேம் நசீர் இவ்வளவு படங்களில் நடித்தும், சொந்தமாக படம் எடுக்கவில்லை! அந்த ஆசையே அவருக்கு இருந்தது இல்லை.
ஆனால், நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியையும், மோகன்லாலையும் நடிக்க வைத்து ஒரு படத்தை தானே இயக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது கனவாகவே முடிந்தது.