
திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர். நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.
சங்கரதாசு சுவாமிகளின் மாணவரும் நாடக நடிகருமான டி. எசு. கண்ணுசாமி பிள்ளை என்பவருக்கும் சீதையம்மாள் என்பவருக்கும் மூன்றாவது மகனாக திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்சந்தையில் 1912 ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தவர் தி. க. சண்முகம்.[3] தி. க. சங்கரன் (1904 – 1948.03.31), தி.க. முத்துச்சாமி ஆகிய இருவரும் இவருக்கு அண்ணன்மார் ஆவர். தி. க. பகவதி (1917 – ) இவருக்கு தம்பி ஆவார். சுப்பம்மாள் (1920 – ), காமாட்சி (1921 – ) ஆகியோர் இவருக்குத் தங்கைகள் ஆவர். இவர்கள் நால்வரை தமிழ்நாடக உலகம் டி. கே. எசு சகோதரர்கள் என அழைத்தது.
இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்.

சங்கரதாசு சுவாமிகள் 1918 ஆம் ஆண்டில் மதுரையில் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனத்தில் 1918ஆம் ஆண்டில் தி. க. சங்கரன், தி. க. முத்துசாமி, தி. க. சண்முகம் ஆகிய மூவரும் அவர்தம் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர். 1922ஆம் ஆண்டு ஆகத்து 3ஆம் நாள் இரவு அக்குழுவிலிருந்து அவர்கள் மூவரும் அவர்தம் தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்
தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட தி. க. சண்முகம் அவர் உடன்பிறந்தவர்களும் தெ. பொ. கிருட்டினசாமி பாவலர் நடத்திய பால மனோகர சபை என்னும் நாடகக் குழுவில் 1922 ஆகத்து 4ஆம் நாள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் விலகியதால் சங்கரதாசு சுவாமிகள் மனம்நொந்து இருப்பதாக அறிந்து, அக்டோபர் 15ஆம் நாள் பால மனோகர சபையிலிருந்து தி.க.ச. உடன்பிறவியர் மூவரும் அவர்தம் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்டனர்
பின்னர் தி. க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தவர்களும் தம் சிற்றப்பாவை உரிமையாளரென அறிவித்து 1925 மார்ச்சு 31ஆம் நாள், திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா என்னும் நாடகக் குழுவை உருவாக்கினர். அக்குழுவின் முதல்நாடகமாக “கோவலன்” என்னும் நாடகம் அந்நாளிலேயே அரங்கேற்றப்பட்டது.[8] அப்பொழுது எம். கந்தசாமி முதலியாரிடம் நடிப்பாசிரியராக இக்குழுவில் பணியேற்றார். அவரிடம் தி. க. சண்முகம் நாடக நுட்பங்களைப் பயின்றார்.

சிறிதுகாலம் நாடக வாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என தி. க. ச. உடன்பிறந்தோர் நால்வரும் நாகர்கோவிலுக்குச் சென்று உறவினர்களுடன் வாழத் தொடங்கினர். அப்பொழுது அல்லி அர்ஜூனா, சதாரம் ஆகிய இரண்டு சிறப்பு நாடகங்களில் (Special Drama) தி. க. சண்முகம் நடித்தார். ஆனால் நாடக முறை அவருக்கு பிடிக்கவில்லை. எனவே, அதிலிருந்து விலகினார்.
இவ்வாறு இவர் 74 நாடகங்களில் 109 கதைமாந்தராக நடித்தார். 1935 ஆம் ஆண்டில் மேனகா என்னும் திரைப்படத்தின் வழியாக திரையுலகில் நுழைந்து கப்பலோட்டிய தமிழன் என்னும் படம் வரை பல்வேறு படங்களில் நடித்தார்.
இவர் தமிழகத்திற்கு வெளியே பம்பாய். தில்லி, கல்கத்தா, நாகபுரி, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கும் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தன் குழுவினருடன் சென்று நாடகங்கள் நடத்தினார்.
ஔவையார் நாடகத்தில் ஔவையாராக வேடமேற்றுச் சிறப்பாக நடித்ததால் ஔவை சண்முகம் என அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த படங்கள்: மேனகா, பாலாமணி, பூலோக ரம்பை, குமாஸ்தாவின் பெண், பில்ஹணன், ஓர் இரவு, இன்ஸ்பெக்டர், மனிதன், ரத்த பாசம், வஞ்சிக்கோட்டை வாலிபன், கடவுளின் குழந்தை, கப்பலோட்டிய தமிழன்
