Wednesday, October 28
Shadow

என்னை அறிந்தால் அனிகா மீண்டும் அஜித்துடன் இணைகிறார்

அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில், அனுஷ்கா மற்றும் த்ரிஷா இருவரும் ஹீரோயினாக நடித்தனர். வில்லனாக அருண் விஜய்யும், அவருக்கு ஜோடியாக பார்வதி நாயரும் நடித்தனர்.

இந்தப் படத்தில், அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர், நிறைய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’ படம்தான் தமிழில் இவர் அறிமுகமான முதல் படம். அதில் இவர் சிறப்பாக நடித்ததைத் தொடர்ந்து ‘நானும் ரெளடி தான்’ மற்றும் ‘மிருதன்’ ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், மறுபடியும் அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கிறார் அனிகா என்று தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதாவது வேடமா என்று தெரியவில்லை. சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக நடிக்கும் படம் இது.

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ஆஷிஷ் வித்யார்த்தி, கோவை சரளா, போஸ் வெங்கட், கலைராணி, நமோ நாராயணா எனப் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார். அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.