
‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு… இரட்டை மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் – இயக்குநர் எம். கார்த்திகேசன்!
கிராமிய வாழ்க்கையின் மண்வாசனையையும், சமூகப் பொறுப்புணர்வையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அறுவடை’ திரைப்படம் தனது படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்துடன், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் கதாநாயகனுமான எம். கார்த்திகேசன் தனது பிறந்தநாளையும் கொண்டாடியிருப்பது அவருக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எம்.கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், தயாரிப்பாளராக அறிமுகமான எம். கார்த்திகேசனின் இரண்டாவது தயாரிப்பாகும். இதற்கு முன் அவர் தயாரித்த ‘லாரா’ திரைப்படம் கவனம் பெற்ற நிலையில், தற்போது இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை ‘அறுவடை’ மூலம் தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் எம். கார்த்திகேசனே கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் இடம்பெற்றுள்ளார். மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை பிரேம்குமார் முருகேசன், இசையை ரகு ஸ்ரவன் குமார், படத்தொகுப்பை கே.கே. விக்னேஷ் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை கார்த்திக் நேத்தா, எம். கார்த்திகேசன், கானா சக்தி ஆகியோர் எழுதியுள்ளனர். நடன இயக்கத்தை ஏஎம்ஜே, கலை இயக்கத்தை ஜோதின் விஷாக் – அனுப்ஷா, சண்டைக் காட்சிகளை டிஆர் கவனித்துள்ளனர். இணை இயக்குநராக ஜெயன் பணியாற்றியுள்ளார்.
நகர வாழ்க்கையை மையப்படுத்திய திரைப்படங்கள் அதிகம் வெளியாகும் சூழலில், கிராமிய மக்களின் வாழ்வியல், பண்பாடு, உறவுகள் மற்றும் சமூக மாற்றங்களை ஆழமாகப் பதிவு செய்யும் படைப்பாக ‘அறுவடை’ உருவாகியுள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் உருவாகும் சிறிய பிரச்சினை எவ்வாறு பெரும் சமூகச் சிக்கலாக மாறுகிறது என்பதையே இப்படம் பேசுகிறது.
படம் குறித்து இயக்குநர் எம். கார்த்திகேசன் கூறுகையில்,
“ஒரு மனிதன் செய்கிற செயல்களின் விளைவுகள் அவனைத் தேடி வரும் என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு இந்தக் கதையை உருவாக்கியுள்ளோம். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற தத்துவமே ‘அறுவடை’ என்ற தலைப்பிற்கான அடிப்படை. கிராமிய உணர்வுகளோடும் சமூகப் பொறுப்போடும் உருவான இந்தப் படத்தை உலகம் முழுவதும் வரும் ஜூலை மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் என் பிறந்தநாளையும் கொண்டாடுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய மகிழ்ச்சியாக அமைந்துள்ளது,” என்றார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள ‘அறுவடை’ திரைப்படம், கிராமிய பின்னணியில் சமூக அக்கறையுடன் சொல்லப்படும் வலுவான கதையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
