Wednesday, June 24
Shadow

விஜய்க்கு பைரவா 6௦ இல்லை அதுக்கும் மேல 66வது படம்

தமிழ் ரசிகர்களுக்கு சுடச்சுட பொங்கல் விருந்தளிக்க வருகிறார் பைரவா. இளைய தளபதி என்று அவரது ரசிகர்களாலும், சினிமாத் துறையினராலும் போற்றப்படும் விஜய்க்கு இது அறுபதாவது படம் என்கிறார்கள். அதாவது அவர் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து இந்த கணக்கு. ஆனால், அதற்கு முன்பாகவே அவர் குழந்தை நட்சத்திரமாக வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி என்று ஆறு படங்களை அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இது தவிர்த்து ஹீரோவான பிறகும் அவரது அப்பா இயக்கத்தில் நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ் மோர், நெஞ்சினிலே, சுக்ரன், பந்தயம் என்று பத்து படங்கள் நடித்திருக்கிறார். அப்பாவின் இயக்கத்தில் மகன் பதினாறு படங்கள் நடித்திருப்பது என்பது அனேகமாக உலகத்திலேயே விஜய் – எஸ்.ஏ.சி. காம்பினேஷனில்தான் நடந்திருக்கும்.

விஜய்யை ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் இயக்கிய இயக்குநர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.செல்வா, நிலாவே வா, பகவதி படங்களை ஏ.வெங்கடேஷ், நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே, வசீகரா படங்களை கே.செல்வபாரதி என்று விஜய்யை வைத்து ஹாட்ரிக் அடித்தவர்கள் இருவர். காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு படங்களை பாசில், பிரியமுடன், யூத் படங்களை வின்சென்ட் செல்வா, ஃப்ரண்ட்ஸ், காவலன் படங்களை சித்திக், கில்லி, குருவி படங்களை தரணி, திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு, திருமலை, ஆதி படங்களை ரமணா, போக்கிரி, வில்லு படங்களை பிரபுதேவா, துப்பாக்கி, கத்தி படங்களை ஏ.ஆர்.முருகதாஸ், அழகிய தமிழ் மகன் படத்தைத் தொடர்ந்து பைரவாவை பரதன், தெறியைத் தொடர்ந்து அடுத்த விஜய் படத்தை இயக்கும் அட்லி என்று இவரை வைத்து இரு படங்கள் இயக்கியவர்கள் மொத்தம் பத்து இயக்குநர்கள்.

ராஜாவின் பார்வையிலே – ஜானகி சவுந்தர், சந்திரலேகா – நம்பிராஜ், கோயமுத்தூர் மாப்ளே – சி.ரங்கநாதன், பூவே உனக்காக – விக்ரமன், வசந்த வாசல் – எம்.ஆர்., காலமெல்லாம் காத்திருப்பேன் – ஆர்.சுந்தர்ராஜன், லவ் டுடே – பாலசேகரன், நேருக்கு நேர் வசந்த், துள்ளாத மனமும் துள்ளும் – எஸ்.எழில், என்றென்றும் காதல் – மனோஜ் பட்னாகர், மின்சாரக் கண்ணா – கே.எஸ்.ரவிக்குமார், குஷி – எஸ்.ஜே.சூர்யா, பத்ரி – பி.ஏ.அருண், பிரசாத், ஷாஜகான் கே.எஸ்.ரவி, தமிழன் மஜீத், புதிய கீதை கே.பி.ஜெகந்நாத், உதயா அழகம் பெருமாள், மதுர – ஆர்.மாதேஷ், சச்சின் – ஜான் மகேந்திரன், வேட்டைக்காரன் – பாபு சிவன், சுறா – எஸ்.பி.ராஜகுமார், வேலாயுதம் – ஜெயம் ராஜா, – நண்பன் – ஷங்கர், தலைவா – ஏ.எல்.விஜய், ஜில்லா – ஆர்.டி.நேசன், புலி – சிம்புதேவன் என்று மொத்தம் இருபத்தியாறு பேர் விஜய்யை வைத்து தலா ஒரு படம் எடுத்தவர்கள்.

தமிழில் தனக்கு ஒரு மெகாஹிட்டை கொடுத்த இயக்குநரான பிரபுதேவாவின் அன்பு வேண்டுகோளுக்காக, பிரபுதேவா இந்தியில் 2.0 வில்லன் அக்‌ஷய்குமாரை ஹீரோவாக வைத்து இயக்கிய ரவுடி ராத்தோர் (தமிழில் சிறுத்தை) படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் விஜய். ஆக மொத்தம் விஜய் இதுவரை முப்பத்தி ஒன்பது இயக்குநர்களோடு பணியாற்றியிருக்கிறார். இவ்வாறாக பலதரப்பட்ட இயக்குநர்களோடு பணியாற்றியதால்தான் விஜய்யின் பன்முகத்தன்மை வெளிப்படுகிறது. படப்பிடிப்பில் தனக்கு கம்ஃபர்ட்டாக எந்த இயக்குநரோடு ஃபீல் பண்ணுகிறாரோ, அவர்களோடு மறுபடியும் பணியாற்ற ஆர்வம் காட்டுவார். அதே நேரம், பெரிய இயக்குநர்களிடம் உதவியாளர்களாகப் பணிபுரியும் திறமையாளர்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து உயர்த்தி விடுவதிலும் விஜய்க்கு நிகர் விஜய்தான்.

நடிப்பு தவிர்த்து அவருக்குப் பிடித்த வேலை, பின்னணி பாடுவது. இவருடைய அம்மா ஷோபாவும் பிரபலமான பாடகி, தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தரும் (நடிகர் மோகனுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் இவர்தான்) பிரபலமான பாடகர் என்பதால் பாடுவதில் விஜய்க்கு மிகவும் ஆர்வம். ஆரம்ப காலத்தில் விஜய் படங்களில் அவர் பாடிய பாடல்கள் திரையில் வரும்போது இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்று டைட்டிலே போடுவார்கள். ரசிகர்களின் கரகோஷத்தால் அரங்கங்கள் அலறும். தனக்காக மட்டுமின்றி சூர்யாவுக்காகவும் ஒரு படத்தில் பாடியிருக்கிறார். ரசிகன், தேவா, விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே, மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன், ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, துள்ளித் திரிந்த காலம், ப்ரியமுடன், வேலை, நிலாவே வா, பெரியண்ணா, நெஞ்சினிலே, ப்ரியமானவளே, பத்ரி, தமிழன், பகவதி, சச்சின், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா ஆகிய படங்களில் விஜய் பாடியிருக்கிறார்.

தனித்துவமான இவரது குரல்வளம் ரசிகர்களை மட்டுமின்றி ரசிகைகளைப் பெரிதும் கவர்ந்திருப்பதால் மியூசிக் சேனல்களில் விஜய் பாடிய பாடல்கள் எவர்க்ரீன் ஹிட்.விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, அவரை உயிருக்கு உயிராக காதலித்து கைபிடித்தவர் சங்கீதா. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் இருக்கிறார்கள். வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டுக்கு விஜய்யோடு செம ஆட்டம் போட்ட சஞ்சய், அழகிய தமிழ் மகன், தெறி ஆகிய படங்களிலும் முகம் காட்டியிருக்கிறார். விஜய்யின் செல்ல மகள் திவ்யா சாஷா, தெறி மூலமாக இளைய தளபதி ரசிகர்களுக்கு தன்னுடைய முகத்தைக் காட்டியிருக்கிறார்

Leave a Reply