Wednesday, May 29
Shadow

விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த ‘ஐ-டியூன்ஸ்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைரவா’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜனவரி 12ம் தேதி ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியது லகரி மியூசிக் நிறுவனம். ‘பைரவா’ பாடல்கள் வெளியீடு முதலில் டிசம்பர் 20ம் தேதி இருந்தது. பிறகு டிசம்பர் 23ம் தேதி மாற்றியது படக்குழு. ஆனால், எதிர்பாராத விதமாக ஐ-டியூன்ஸ் இணையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பாடல்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது.

இதுகுறித்து லகரி மியூசிக் நிறுவனம், “மிகவும் வருந்துகிறோம். தகவல் தொடர்பு கோளாறால் ஐ-டியூன்ஸ் இணையத்தில் ‘பைரவா’ பாடல்கள் வெளியாகிவிட்டது. ஆனால், உடனடியாக தெரியப்படுத்தி மாற்றினோம்.

ஐ-டியூன்ஸ் அலுவலகம் சில வாரங்கள் இயங்காததால் முந்தைய இசை வெளியீட்டு தேதிக்கு வெளியிட்டு விட்டார்கள். நாங்கள் அனுப்பிய புதிய தேதி அடங்கிய இ-மெயிலை அவர்கள் பார்க்கவில்லை. விரைவில் அப்பாடல்களை இணையத்தில் வெளியிடுவோம்” என்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கி அரை மணி நேரத்துக்கு ஒரு பாடல் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்கள். இவற்றில் 2 பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் யாவுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. “சந்தோஷ் நாராயணன் இசையில் இப்பாடல்கள் எதுவுமே எடுபடவில்லை” என்று பல்வேறு விமர்சகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

‘பைரவா’ படத்தின் துவக்கத்திலிருந்தே படத்தின் பெயர், போஸ்டர், படங்கள் ஆகியவை ஒன்றின்பின் ஒன்றாக இணையத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. தற்போது இந்த வரிசையில் பாடல்களும் இணைந்துள்ளது.

Leave a Reply