
காவிரி விவகாரத்தால் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இருமாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும், நடிகையுமான சஞ்சனா ஆகியோர் கன்னடக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யவும் தயார் என்று கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி மணிரத்னமும் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னடகாரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது போன்ற ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் சுஹாசினியை இங்குள்ளவர்கள் பலரும் வசை பாட தொடங்கினர். இதையடுத்து இந்த செய்தி சுஹாசினியின் கவனத்திற்கு வர உடனடியாக தன் டுவிட்டர் பக்கத்தில் தான் எந்த கருத்தும் சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஹாசினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது… ‛‛ஒரு அரசியல் விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று டுவீட்டாகவும், வாட்ஸ்அப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது, பொய்யானது. எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது.
காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் நான் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்தவும்” என்று கூறியுள்ளார்.