
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’, மே மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில், மேஜர் கதிரவன் என்ற ராணுவ அதிகாரியாக விஷால் நடித்துள்ளார். ‘ஒயிட் டெவில்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். முதலில் இந்த வேடத்தில் ஆர்யா நடிப்பதாக இருந்தது. அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட, அர்ஜுன் ஒப்பந்தமானார்.
டாக்டர் ரதிதேவி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
கடந்த பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் முடியாததால், ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், வருகிற மே மாதம் 11 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், தெலுங்கில் ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
