
ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘காலா’ படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதியான இன்று வெளியாக இருந்தது. ஆனால், டீசர் நாளை வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்தார்.
‘காலா’ டீசர் வெளியீட்டை தள்ளிவைத்ததில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.
நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக ‘காலா’ படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.
டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் தனுஷ். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தள்ளிவைப்பு அறிவிப்பில் டீசர் ரிலீஸ் மார்ச் 2 என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, ரசிகர்களை அதிகமாகக் காக்க வைக்காமல் நாளை காலையே வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘காலா’ டீசர் நாளை 11 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் நேற்று போட்ட ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த இயக்குனர் ரஞ்சித், தள்ளி வைக்கப்பட்டதாக போட்ட ட்வீட்டை ரீ-ட்வீட் செய்யவில்லை. இதனால் ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதில் ரஞ்சித்துக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு தனது படங்களிலும் அவற்றை எதிரொலிப்பவர். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் விருப்பமுள்ளவர். அவரது மறைவைக் காரணம் காட்டி டீசர் ரிலீஸை தள்ளிவைத்ததை ரஞ்சித் விரும்பவில்லையாம்.
படத்தில் தலித்திய அரசியல், சாதி, மத, இறை மறுப்பு பேசும் ரஞ்சித் படத்துக்கே இந்த நிலைமையா எனப் பேசி வருகிறார்கள். உச்ச நட்சத்திரத்தின் படம் என்பதால் சில நேரங்களில் இசைந்து கொடுத்துத்தான் ஆகவேண்டும் எனும் கருத்தையும் முன்வைக்கின்றனர்.
