கடந்த 2012-ம் வருடம் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில், சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம்‘கழுகு.’ ஏழு வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகமாக அதே கூட்டணியில் ‘கழுகு 2.’
அந்த அடர்ந்த காட்டை வெட்டியழித்து பணம் பார்க்க குறிவைக்கிறது அதிகார வர்க்கம். காட்டில் மரம் வெட்டுகிற கூலியாட்களை செந்நாய்களிடமிருந்து காப்பாற்றும் வேட்டைக்காரனாக காட்டுக்குள் நுழைகிறார் கிருஷ்ணா. அப்படியே அங்கு மரம் வெட்டும் தொழிலாளிகளில் ஒருவரான பிந்து மாதவியின் மனதிலும் நுழைகிறார்.
காதலித்தவளைக் கைப்பிடித்து சொகுசாக வாழவைக்க எம்.எல்.ஏ. வீட்டில் திருடப்போகிறார். அந்த முயற்சியில் ஜெயித்தாரா இல்லையா என்பதே ‘கழுகு 2’ தந்திருக்கும் விறுவிறு திரைக்கதையோட்டம்…
காமெடி, ரொமான்ஸ் என புகுந்து விளையாடுகிறார் கிருஷ்ணா. நடிப்பில் நல்ல முதிர்ச்சி.
பிந்து மாதவி வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின். ஆனாலும், கடைசிக் காட்சியில் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.
எம்.எஸ். பாஸ்கர், காளி வெங்கட், ஹரிஷ் பேரடி… மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். அதே போல ‘பிக்பாஸ்’ யாஷிகா ஆனந்த் போடும் ஐட்டம் டான்ஸ் செம ஜில்!
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசனைக்கு விருந்து. பின்னணி இசையிலும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் யுவன்.
கதை நடக்கும் காட்டின் அழகையும் பிரமாண்டத்தையும் உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தியிருக்கும் ராஜா பட்டாசர்ஜியின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு பரபரப்பு கூட்டியிருக்கும் கோபிகிருஷ்ணாவின் எடிட்டிங் எதையும் பாராட்டாமல் விட முடியாது. Rank 3/5