தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, மொழி என்னும் எல்லையை தாண்டி எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர். அழகையும், ஆற்றலையும் ஒருசேர பெற்று இருக்கும் மகேஷ் பாபு, தற்போது ஏ ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருப்பது மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் வர்த்தக உலகத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் பெற்று வரும் இந்த மிக சிறந்த ஹீரோ – இயக்குனர் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பானது, கடந்த மாதம் ஹைதெராபாத்தில் தொடங்கியது . வெற்றிகரமாக படத்தின் சில காட்சிகளை ஹைதராபாத் நகரில் படமாக்கிய படக்குழுவினர், தங்கள் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க சென்னையை வந்தடைந்தனர் . இந்த திரைப்படத்திற்காக சென்னைக்கு அருகே ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை அமைத்து, அதில் இருபது நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மகேஷ் பாபு, முருகதாஸ் மற்றும் ஒளிப்பதிவு மேதை சந்தோஷ் சிவன் என வலுவான கூட்டணியோடு கை கோர்த்து இருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கும் தயாரிப்பாளர் மது கூறுகையில், “சென்னையில் , தமிழ் ரசிகர்கள் இடையே மகேஷ் பாபு ஏற்படுத்தி இருக்கும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் கண்டு நான் வியந்து போகிறேன். படத்தின் முக்கிய காட்சிகளை ஏறக்குறைய இருபது நாட்கள் நாங்கள் சென்னையில் இருந்து படமாக்கி இருக்கிறோம். வர்த்தக ரீதியாகவும் சரி, ரசிகர்களிடமும் சரி இந்தப் படம் புதியதொரு சாதனையை படைக்கும்” என்று கூறினார் தயாரிப்பாளர் மது.