Tuesday, February 11
Shadow

மனுசனா நீ – திரை விமர்சனம் (2/5)

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலிக்கிறார்கள். ஆதர்ஷின் அப்பா நடத்தி வரும் ரைஸ் மில் நிலத்தை அந்த ஊர் ரவுடியான சுப்பு பஞ்சு கைப்பற்ற நினைக்கிறார்.

அந்த இடத்தை அடைவதற்காக பல்வேறு சூழ்ச்சிகளையும் செய்கிறார். தனத அப்பாவுக்கு தொல்லை கொடுக்கும் சுப்பு பஞ்சுவை அடிக்க நினைக்கும் ஆதர்ஷை, சுப்பு பஞ்சுவின் ஆட்கள் அடித்து விடுகின்றனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு, எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் ஆதர்ஷின் உடலில் அந்த மருத்துவமனையின் டீனான கஸாலி ஒரு மருந்தை செலுத்தி அனுப்புகிறார்.

அந்த மருந்து செய்யும் வேலையால் ஆதர்ஷ் திடீரென சக்தி வாய்ந்தவனாக மாறி, சுப்பு பஞ்சு மற்றும் அவனது ஆட்களை அடித்து நொறுக்குகிறார். சில நாட்களில் அவர் முகத்தில் ஏதோ மாற்றம் வர, அதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் என்பதை போலீஸார் கண்டுபிடிக்கின்றனர்.

முடிவில் கஸாலி ஏன் அந்த மருந்தை ஆதர்ஷின் உடலில் செலுத்தினார்? அதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? இளைஞர்கள் காணாமல் போவதன் காரணம் என்ன? ஆதர்ஷ் தனது காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் ஆதர்ஷ், நாயகி அனுகிருஷ்ணா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். காதல், ஆக்‌ஷன், அதிரடி என ஓரளவு திருப்திபடுத்த முயற்சித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்த்திருக்கி்ன்றனர்.

வித்தியாசமான கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கஸாலி. இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனையின் டீனாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்திற்கு இசையையும் இவரே அமைத்திருக்கிறார். மெடிக்கல் க்ரைம் திரில்லர் படத்தை மாறுப்பட்ட கோணத்தில் கொடுக்க நினைத்திருக்கிறார். அது ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.
பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம். அகரன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மனுசனா நீ’ ரசிக்க வைத்திருக்கலாம்.