
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அதேநேரத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தற்போது அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தை `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இந்த படத்தில் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின், அதுல்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘எந்த குழந்தையும் இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், குழந்தைகளுடன் நடித்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. குழந்தை அக்ஷித்தா மிகவும் சிறப்பாக நடித்தாள். தொடர்ந்து 10 நாட்களாக 4 கேமராக்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார் இயக்குனர். இப்படம் உறுதியாக மிக தரமான படமாக வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஹீரோ விக்ராந்த்க்கு மிகவும் பொருத்தமான வலுவான கதாபாத்திரம், ரொம்ப என்ஜாய் பண்ணி நானும் விக்ராந்தும் ஒர்க் பண்றோம்’ என்றார்.