நடிகர் ஆரி, நடிகை ஆஷ்னாசவேரி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்துக்கு தடை கோரி நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என்னுடைய தந்தை நாகேஷ், சென்னை தியாகராயநகரில் நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக தியேட்டர் நடத்தி வந்தார். இந்தநிலையில், டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படம் எடுத்து வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
திரைப்படத்துக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை.
எனவே, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். எங்கள் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல், எனது தந்தையின் பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். முடிவில், ‘படத்தயாரிப்பு நிறுவனம் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் தான் படத்தை எடுத்துள்ளது. மனுதாரரின் தந்தை, ‘நாகேஷ் தியேட்டர்’ என்ற பெயரில் தான் தியேட்டர் வைத்திருந்திருக்கிறார்.
எனவே, ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.