Sunday, December 8
Shadow

பத்மாவத் (மக்களின் ராணி) – திரைவிமர்சனம் (4/5)

சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகளான இளவரசி பத்மாவதியாக வருகிறார் தீபிகா படுகோனே. ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென்னாக வருகிறார் ஷாஹித் கபூர். சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக அவர் இலங்கை செல்கிறார். அங்கு காட்டில் மான் வேட்டையாடி கொண்டிருந்த பத்மாவதி செலுத்திய ஒரு அம்பு குறிதவறி, ரத்தன் சென் மீது பாய்கிறது. இதையடுத்து ரத்தன் சென்னிடம் மன்னிப்பு கேட்கும் பத்மாவதி, ரத்தன் சென்னை ஒரு குகையில் வைத்து ரகசியமாக சிகிச்சை அளிக்கிறார்.

சிகிச்சை செய்யும் நிலையில் ரத்தன் சென் – பத்மாவதி இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. பின்னர் பத்மாவதியை தனது நாட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சித்தூர் மக்களும் பத்மாவதியை தங்களது இளைய ராணியாக ஏற்று அவர்மீது பாசமும். மரியாதையும் காட்டி வருகின்றனர். ஆனால், அரண்மனையின் தலைமை ராஜகுருவுக்கு பத்மாவதியை பார்த்த முதல் பார்வையிலேயே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுகிறது.

இதையடுத்து பத்மாவதியும், ரத்தன் சிங்கும் படுக்கையறையில் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சியை ராஜகுரு மறந்து இருந்து பார்த்த குற்றத்திற்காக நாடு கடத்தப்படுகிறார்.

தன்னிகரற்ற மாவீரரும், எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவரும், பெண் பித்தருமான டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியை சந்திக்கும் ராஜகுரு, பத்மாவதியின் ஒப்பில்லாத அழகை புகழ்ந்து கூறி, பார்க்காமலேயே பத்மாவதி மீது காதல் ஏற்பட வைக்கிறார்.

அலாவுதீன் கில்ஜியின் ஆசையை தூண்டி, சித்தூர் மீது அவரை படை எடுக்க வைத்து, அந்த ஆட்சியை அழித்துவிட திட்டம் தீட்டுகிறார்.

எப்படியாவது பத்மாவதியின் அழகை பார்த்துவிட வேண்டும் என்ற மோகத்துடன் ரத்தன் சென்னின் ஆட்சி நடைபெறும் சித்தூர் சமஸ்தானத்தின்மீது போர் தொடுக்கிறார் அலாவுதீன் கில்ஜி. கடைசியில் அலாவுதீன் கில்ஜியின் படைகள் டெல்லியில் இருந்து நகர்ந்து சித்தூர் நகரை முற்றுகையிடுகின்றன. இந்த படையை எதிர்கொண்டு ரத்தன் சிங் வெற்றி பெற்றாரா? அல்லது, அலாவுதீன் கில்ஜி தனது எண்ணப்படி பத்மாவதி அடைந்தாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியான பத்மாவதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே ஒப்பற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு ராணிக்குண்டான அமைதி, புத்திக்கூர்மை, ஆர்வம், கோபப் பேச்சு என தனது ஒவ்வொரு அசைவிலும் ரசிக்க வைக்கிறார். ராணியாக அவர் பேசும் வசனங்களும், நடனமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மிகை நடிப்பில்லாமல் பத்மாவதி ராணியாகவே வாழ்ந்திருக்கிறார். ராஜபுத்திரனின் வாள் வீரத்திற்கு இணையாக ராஜபுத்ரியின் வீரம் அவளது காப்பில் உள்ளது என உணர்ச்சிப்பூர்வமாக பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ராஜபுத்திரன் என்பவன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை தனது, நடை, உடை, பார்வை, பேச்சின் மூலம் அனைவருக்கும் புரியச் செய்திருக்கிறார் ஷாகித் கபூர். தோற்றத்திலும், உடையிலும் ஒரு ராஜபுத்திர அரசனாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக ஒரு முக்கிய காட்சியில் அலாவுதின் கில்ஜியிடம் பேசும் போது, ராஜபுத்திரனின் நேர்மையுடன் அவர் பேசும் வசனங்கள் பார்ப்போருக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறது. ராஜபுத்திரர்களுக்காக தன்னையே தியாகம் செய்யவும் தயங்காத காட்சிகளில் மனதில் நிற்கிறார்.

தனது தோற்றத்தின் மூலமே அனைவரையும் மிரள வைக்கும் ரன்வீர் சிங், தனது நெகட்டிவ் நடிப்பால் அனைவரையும் தன்பக்கம் கவர்கிறார். அவர் பேசும் ஆக்ரோஷமான வசனங்கள் திரையரங்கையே அதிர வைக்க்கிறது. ஒரு மாவீரனாகவும், பத்மாவதியை அடைய நினைக்கும் தந்திரவாதியாகவும் வலம் வரும் ரன்வீர், அலாவுதீன் கில்ஜியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். ரன்வீர் சிங்கின் மனைவியாக வரும் அதிதி ராவ் ஹிடாரி, பார்வையாலேயே தான் நினைப்பதை நடத்தக்கூடியவளாக, ரசிக்க வைத்திருக்கிறார்.

கதைக்கே முக்கிய கருவாக இருந்து பிரச்னையை தூண்டி விடும் கதாபாத்திரத்தில் ராஜ குருவாக வரும் ஜிம் சர்ப் அவரது கதாபாத்திரத்தில் விஷமமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அனுபிரியா, மஞ்சித்சிங், ரஜாமுரத் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதையுடன் ஒன்றி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சித்தூர் ராணியின் வாழ்க்கை வரலாற்றை பிரமாண்டமாக கொடுத்து இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. படத்திற்காக கடுமையாக உழைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். ராஜபுத்திர வம்சத்தினரையும், அவர்களது புகழையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். அலாவுதீன், சித்தூர் ராணி பற்றி நினைப்பதாக அமைக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்ததாகவும், அதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அவை நீக்கப்பட்ட பிறகும் கதை சிறிதும் பிசிறு இல்லாமல் பிரமாண்டமாக அமைந்துள்ளது சிறப்பு. படத்தில் வசனங்கள் வலு சேர்த்திருக்கின்றன. பாதிக்கு பின்னரும் கதையில் நிறைய திருப்பங்கள், கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். தமிழ் வசங்களும் சிறப்பாக கோர்க்கப்பட்டுள்ளது.

படத்தில் உடை வடிவமைப்பாளர்கள், கலை இயக்கம் என அனைத்து தரப்பினரும் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கின்றனர்.

சஞ்சித் பல்ஹரா, சஞ்சய் லீலா பன்சாலியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக பத்மாவதி தீம் பாடல் மனதில் பதியும்படியாக அமைந்திருக்கிறது. சுதீப் சட்டர்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. அந்த காலத்திற்கே போன ஒரு அனுபவம் கிடைக்கிறது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் பிசிறில்லாமல் வந்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் `பத்மாவத்’ மக்களின் ராணி.

Leave a Reply