
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் படம் ‘அருவி’.
கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதீதி பாலனின் நடிப்புக்கும், திருநங்கை அஞ்சலி வரதனின் கதாபாத்திரத்துக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேநேரத்தில் படத்தின் இயக்குநக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களும், திரையுகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறாக பாராட்டுக்களை பெற்றுவரும் இந்த படம் குறித்து சில விமர்சனங்களும் வந்த வண்ணமாக இருக்கிறது. படத்தில் பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை கிண்டல் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
#அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! என்று குறிப்பிட்டிருக்கிறார்.
