Friday, March 13
Shadow

ஆகஸ்ட் 26 – எஸ்.எஸ்.வாசன் நினைவு தினம்

அகில இந்தியாவையும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த மேதை எஸ்.எஸ்.வாசன். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். திறமை, புத்திக்கூர்மை, கடுமையான உழைப்பு மூலம் பத்திரிகைத் துறையிலும் சினிமா துறையிலும் உச்சத்தைத் தொட்டவர். 1903 மார்ச் 10-ல் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார் எஸ்.எஸ்.வாசன். தந்தை பெயர் சுப்ரமணியம், தாயார் வாலாம்பாள். வாசனின் முழுப் பெயர் சீனுவாசன். நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாயார் அரும்பாடுபட்டு வாசனைப் படிக்கவைத்தார்.

*வாசன் பற்றி நடிகர் சிவகுமார் சொன்னது இது*:

வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து விதவைத் தாயால் வளர்க்கப் பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையை படிக்க வைத்தார். மூன்று இட்லி, குழந்தைக்குப் போதவில்லை..கூடையில் விற்க வைத்திருந்த இட்லி யிலிந்து ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு வளர்ந்தது.

வாலிப வயதில் திருச்சியிலிருந்து 200 மைல் சைக்கிள் சவாரி செய்து சென்னை வந்தார். தானே சிறுகதை எழுதி துண்டு பிரசுரமாக அச்சிட்டு ஓடும் ரயிலில் அவரே விநியோகம் செய்தார்.தமிழ் சினிமாவின் முன்னோடி கே.சுப்ரமணியம் அவர்களிடமிருந்து 86,467 ரூ 9 அணா 11 பைசாவுக்கு ஜெமினி ஸ்டுடியோவை வாங்கினார். 1940-லிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் தயாரித்தார்.

1948 -ல் ‘சந்திரலேகா’- படத்தை அன்றே 30 லட்சம் செலவில் (இன்று 100 கோடிக்கு மேல் ) தயாரித்து அந்தப் படத்திற்கு சுமார் 700 பிரதிகள் எடுத்து இந்தியா முழுக்க ரிலீஸ் செய்து இந்தியாவின் ‘ செசில் பி டெமில்லி ‘ என்று பெயர் எடுத்தார்.

1953 -ல் ‘ஒளவையார்’ -படத்தை – 6 ஆண்டுகள் தயாரித்து மீண்டும் சரித்திரம் படைத்தார். ஔவையாக நடித்த கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கு 4 லட்சம் சம்பளம் கொடுத்தார்.ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரும் அவரே. அந்த மாமனிதர் இயக்கத்தில் 1966-ல் காஞ்சனாவின் கணவராக, சிவாஜியின் மருமகனாக ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ -படத்தில் 1500 ரூ சம்பளத்தில் நடித்ததை பாக்கியமாக நினைக்கிறேன்

சைனா பஜாரில் சிறிதும் பெரிதுமாக நடந்துவந்த வியாபாரங்கள் வாசனின் மனதைக் கவர்ந்தன. அங்கு விற்கப்படும் பொருட்களைப் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது, அதைக் கேட்டுக் கடிதம் எழுதுவோருக்கு வி.பி.பி.யில் பொருளை அனுப்பிப் பணம் பெறுவது என்ற ‘மெயில் ஆர்டர்’ முறையை முதல் முறையாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதே சமயத்தில், அவருக்கு எழுதும் ஆர்வமும் இருந்தது. அந்நாட்களில் பலரும் பேச அச்சப்படுகிற விஷயத்தைத் துணிச்சலாகப் புத்தகமாக எழுதினார்.

1927-ல் வெளிவந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’. ஆங்கிலத்தில் அதற்கு ‘மிஸ்டரீஸ் ஆஃப் மேரீட் லைஃப்’ (`MYSTERIES OF MARRIED LIFE’) – எஸ்.எஸ்.வாசன், ஃபிக்ஷனிஸ்ட் அண்ட் எத்னலாஜிஸ்ட்’ என்று கவர்ச்சிகரமாகத் தலைப்பும் கொடுத்தார். அதை அவரே அச்சிட்டு, விற்பனை செய்தார்.

இதனிடையே பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழறிஞர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை நடத்திவந்தார். தன்னுடைய பொருட்களுக்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார் வாசன். ஆனால், அதற்குரிய பணம் செலுத்தியும் பத்திரிகையும் வரவில்லை, விளம்பரமும் வரவில்லை. அதை விசாரிக்கப் போனார் வாசன். நிதி நெருக்கடியால் பத்திரிகை வரவில்லை; அடுத்த மாதம் வரும் என்றார் வைத்தியநாதய்யர். அதே போல் வந்தது. ஆனால், 1927-க்குப் பிறகு, அவரால் தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியவில்லை. இப்போது வாசன் பத்திரிகையை விலைக்கு வாங்கிக்கொள்ளத் தயார் என்றார். ‘ஆனந்த விகடன்’ எட்டெழுத்து. ஒரு எழுத்துக்கு ரூ.25 என்று முடிவுசெய்து ரூ. 200-க்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை விற்க முன்வந்தார். விகடன் வாசன் கைக்கு வந்தது.

?அடிசினல் சேதி 2

S .S .வாசன் அவர்களுக்கு ஜெமினி ஸ்டூடியோ கட்ட பணம் எப்படி வந்தது தெரியுமா?

வாசன் ஒருதடவை குதிரை பந்தயத்திற்கு போனார். ஜெமினி என்ற குதிரையின் மேல் பணம் கட்டினார்.அந்த பந்தயத்தில் ஜெயித்து, அவருக்கு எக்கச்சக்கமான பணம் கிடைத்தது.

அதன் ஞாபகார்த்தமாகவே, பரிசு பணத்தில் ,ஸ்டூடியோ வாங்கி, ஜெமினி என்ற பெயரையும் சூட்டினாராம்!.

(அத்தோடு குதிரை பந்தய பழக்கத்துக்கும் முற்றுபுள்ளி வைத்தாராம்).